மோகன்லால் என்னை தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ; கோமல் சர்மா பெருமிதம்!

சென்னை 30 ஜூன் 2022 மோகன்லால் என்னை தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ; கோமல் சர்மா பெருமிதம்!

அழகும் நடிப்புத்திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள் இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள்.

இதற்கான பலன் இங்கே தமிழ் சினிமாவில் கிடைக்காவிட்டாலும் மற்ற மொழிகளில் உள்ள படைப்பாளிகளின் கண்களில் இவர்களது திறமை பளிச்சிட்டு மிகப்பெரிய வாய்ப்புகள் தேடி வந்து பெரிய நட்சத்திரங்களாக மாறியவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட அந்த சிலரில் ஒருவர் தான் நடிகை கோமல் சர்மா .

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் இருந்து மிகப்பெரிய படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் இவரை தேடிவந்து அங்கே அழைத்துச் சென்றன.

அந்தவகையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு மிகப்பிரம்மாண்டமாக வெளியான வரலாற்று படமான மரைக்கார் படத்தில் அர்ஜூனின் மனைவியாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோமல் சர்மா. அந்த படத்திற்காக மலையாள மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார்.

படப்பிடிப்பில் இவரது அர்ப்பணிப்பு உணர்வையும் நடிப்புத்திறமையும் பார்த்த மோகன்லால் இவரிடம், “நீ இன்டர்நேஷனல் லெவலில் பெரிய நடிகையாக வருவாய்” என்று பாராட்டியுள்ளார்.

அப்போதைக்கு அவர் ஏதோ பாராட்டுக்காக சொல்கிறார் என நினைத்த கோமல் சர்மாவுக்கு அதன்பின் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது இயக்கிவரும் பரோஸ் என்கிற படத்தில் கோமல் சர்மாவை அழைத்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தபோது தான் அப்போது மோகன்லால் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததாம்.

இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் வரலாற்றுப்படமாக உருவாகி வரும் இந்த பரோஸ் படத்தில் நடிக்கும் ஒரே ஒரு இந்திய நடிகை, அதுவும் தமிழ் நடிகை கோமல் சர்மா மட்டுமே. கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துல்ல, நடிப்பின் கடவுள் என புகழப்படுகின்ற மோகன்லால், தான் முதன்முதலாக இயக்கும் ஒரு படத்திற்கு, தான் மனதில் நினைத்து வைத்த ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னை தேர்ந்தெடுத்ததையே தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு விருதாக நினைப்பதாக பெருமையுடன் கூறுகிறார் கோமல் சர்மா.

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மரைக்கார் படத்தில் நடித்தபோதே இவரது நடிப்பை கண்டு வியந்த இயக்குனர் பிரியதர்ஷன் இந்தியில் தான் இயக்கி வந்த ஹங்கமா-2 என்கிற படத்திலும் சிம்ரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார்.

இப்படி மலையாளத்தில் கோமல் சர்மாவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வந்த நிலையில் தமிழிலும் சமுத்திரகனி நடித்துள்ள பப்ளிக் என்கிற படத்திலும், அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மோகன்லாலை வைத்து பெருச்சாளி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கிவரும் சாட் பூட் த்ரீ படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்து, அந்த படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் கோமல் சர்மா.

இதில் சாட் பூட் த்ரீ குழந்தைகளை மையப்படுத்திய படமாக உருவாகி உள்ளது.

இதில் குழந்தைகளுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்கிறார் கோமல் சர்மா.

அதேபோல அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள பப்ளிக் படத்தில் சினிமா நட்சத்திரமாக நடித்துள்ளார் கோமல் சர்மா.

அந்தவகையில் இந்த வருடம் கோமல் சர்மா நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன.

அந்தவகையில் பான் இந்தியா நடிகையாகவே மாறிவிட்ட கோமல் சர்மாவை தற்போது இந்தியிலும் தமிழிலும் சில முக்கியமான படவாய்ப்புகள் தேடி வந்துள்ளன.

இந்தியில் ஹங்கமா-2 படத்தில் நடித்து வந்த சமயத்தில்தான் மாநாடு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்ததால் கோமல் சர்மாவால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதை ஏற்க முடியாமல் போய்விட்டது.

அதுகுறித்து ரொம்பவே வருத்தப்படுகிறார் கோமல் சர்மா.

அதேபோல பரோஸ் படப்பிடிப்பில் நடித்து வந்த சமயத்தில்தான் தமிழில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த மிகப்பெரிய படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நழுவிப் போனது என்றும் கூறுகிறார் கோமல் சர்மா.

சக நடிகராக மோகன்லாலுடன் இணைந்து நடித்த கோமல் சர்மா ஒரு இயக்குனராக மோகன்லாலை எப்படி பார்த்தார்..?

“மோகன்லால் தான் நடிக்கும் படங்களில் இயக்குனரின் வேளைகளில் எந்த ஒரு குறுக்கிடும் செய்யமாட்டார்.

அதேபோல தற்போது அவர் இயக்கி வரும் பரோஸ் படத்தில் நடித்தபோது பெரிய நட்சத்திரங்களிடமும் சரி, குழந்தை நட்சத்திரங்களிடமும் சரி, காட்சியை பற்றி மிகவும் பொறுமையாக விளக்குவார்..

அவர் நினைத்திருந்தால் ஒரு கமர்சியல் ஆக்ஷன் படம் எடுத்திருக்க முடியும். ஆனால் தான் முதன்முறையாக இயக்கும் படம் குழந்தைகளை கவரும் விதமாக, குடும்பம் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதையை தேர்வு செய்து இயக்கி வருகிறார்.

பான் இந்தியா படம் என்று சொல்வதைவிட பான் வேர்ல்ட் படம் என சொல்லும் விதமாக பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த பரோஸ். இந்தப்படம் வெளியான பிறகு எனக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் கோமல் சர்மா