திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி) உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

சென்னை 07 ஆகஸ்ட் 2021திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி) உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) அமைப்புடன் செய்து கொண்ட தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் தாங்கள் விலகிக் கொள்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சிலம்பரசன் டி ஆரிடம் இருந்து நான்கு தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பண விவகாரத்தில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக செயல் படுவதால் அவர் பெப்சி அமைப்பின் தலைவராக இருக்கும்வரையிலும் அந்தச் சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது…

“தமிழ்த் திரையுலகம் சுமூகமாகவும், பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு. ஆர்.கே. செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும், தமிழ்த் திரையுலத்தை காப்பாற்றும் வகையிலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் 06.08.2021-அன்று நடைபெற்று அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :

01 – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஒன் டு ஒன்) 06.08.2021-முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

02 – உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக் கொண்டு திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

03 – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

04 – மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ, பணி செய்பவர்களை தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”