Next ஹாலிவுட்டில் நடிக்கிறார் தமன்னா: அவரே ரசிக்கும் வதந்தி
நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், கார்த்தி என தமிழ் முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அவருக்கு, சில மாதங்களாக பெரிய அளவில் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது, தேவி 2 படம் ரிலீசாகி வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து, இதில் நடித்திருக்கும் தமன்னாவுக்கு, தமிழ் திரை படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில், பிக் பாஸ் மற்றும் வதந்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பதில் அளித்திருக்கிறார்.
“தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களாக உங்கள் நண்பர்களில் யாரையெல்லாம் தேர்வு செய்வீர்கள்?” என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தமன்னா, “நடிகர்கள் தனுஷ், விஷால், கார்த்தி, நடிகைகள் ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் ஆகியோரை, பிக் பாஸ் போட்டியாளர்களாக வீட்டில் இருக்க வைத்து விடுவேன்” என கூறியிருக்கிறார். தொடர்ச்சியாக, “வதந்திகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களைப் பற்றி நீங்களே சுவாரஸ்யமாக ஒரு வதந்தியைச் சொல்லுங்கள்” என கேட்டுள்ளனர்.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த தமன்னா, “பொதுவாக வதந்திகளுக்கெல்லாம் எப்போதும் நான் முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். எத்தனை பெரிய செய்தியை பொய்யாக கிளப்பி விட்டாலும், அதற்காக துளியும் ரியாக்ட் செய்ய மாட்டேன். ஏனென்றால், வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அதை கிளப்பியவர் நோக்கம் வெற்றியடைந்து விடும். தொடர்ந்து, அவர் இதை விரும்பி செய்யத் துவங்கி விடுவார். அதனால், ஒரு நாளும் வதந்தியை கண்டு கொள்ள மாட்டேன். …ம், சுவாரஸ்யமான வதந்தி பற்றி கேட்டீர்களே… என்னைப் பற்றிய சுவாரஸ்யமான வதந்தி என்றால், நடிகை தமன்னா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இப்படியொரு வதந்தியைத்தான் நான் கிளப்புவேன். அதுவே, உண்மையானால், ரொம்பவும் சந்தோஷப்படுவேன்” என கூறியிருக்கிறார்.