“Spot” படத்திற்கு கலைப்புலி எஸ் தாணு பாராட்டு.

“ட்ரைலரை விட நான்கு மடங்கு விறுவிறுப்பு அதிகம் “Spot” படத்திற்கு கலைப்புலி எஸ் தாணு பாராட்டு.

சிறிய நடிகர்களை வைத்து படம் இயக்குவதுதான் பாதுகாப்பானது “spot” பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சிவா பேச்சு.

R.F.I பிலிம்ஸ் சார்பில் வி.ஆர்.ஆர். தயாரித்து இயக்கியுள்ள படம் Spot. இதில் கராத்தே கௌசிக் கதாநாயகனாக நடிக்க, அக்னி பவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் நாசர், பருத்திவீரன் சரவணன், ரேஹான், சங்கிலி முருகன், டைகர் கோபால், , ஜோசப், ராஜ் குமார், ரிஷிகாந்த், சேரன் ராஜ், மாஸ்டர் தருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க சேஸிங் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு பாடல்களை விவேகா மற்றும் ஜீவன் மயில் இருவரும் எழுத, விஜய் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே வசூல் என்கிற படத்தில் இயக்குனர் வி.ஆர்.ஆர். மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான்.

வரும் மார்ச்-8 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் விஜய் சங்கர் பேசும்போது, “எத்தனையோ கதவுகளை தட்டினாலும் வாசல் திறக்காத இந்த காலத்தில் என் வீடு தேடி வந்து கதவைத் தட்டிய வாய்ப்பு தான் இந்த படம். வி.ஆர்.ஆர் உடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் வி.ஆர்.ஆர் தொழில் துறையில் வித்தகராக இருந்தாலும், சினிமா மீது உள்ள காதலால் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய சில படங்கள் நல்ல படங்கள் என்றாலும் ஸ்டார் வேல்யூ குறைவான காரணத்தினால் வியாபார ரீதியாக அவருக்கு பெரிய பலன் தரவில்லை. ஒன்று சிறிய நடிகர்களைப் வைத்து படம் எடுக்க வேண்டும், இல்லையென்றால் பெரிய நடிகர்களை வைத்து எடுத்து விட வேண்டும். இடைப்பட்ட நடிகர்களை தேடும்போதுதான் சிலநேரம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். நண்பர் வி.ஆர்.ஆர். இன்னும் தொடர்ந்து பல படங்களை தயாரிக்கும் அளவிற்கு இந்த படம் அவருக்கு வியாபார ரீதியாக பலன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது, “இந்தப்படத்தை நான் பார்த்துவிட்டேன் தந்தையும் மகனும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளார்கள். இந்த படத்தை பற்றி என்னுடன் வி.ஆர்.ஆர் அவ்வப்போது போனில் பேசுவார். அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் நல்லது எதுவும் கூறாமல் கொஞ்சம் நெகட்டிவாகவே அவரிடம் பேசுவேன், ஆனாலும் அதை எல்லாம் பாசிடிவாக மாற்றுவது எப்படி என்பது பற்றி அவர் பேசுவார். அந்த வகையில் உண்மையிலேயே இந்த டிரைலரில் நீங்கள் பார்த்ததை விட நான்கு மடங்கு விறுவிறுப்பு படத்தில் இருக்கிறது என்பதை படம் பார்த்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன். இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. இந்த படத்தில் ஆச்சரியம் என்னவென்றால் நண்பர் வி.ஆர்.ஆர். தனது மகன் ரேஹானை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது தான். சில வருடங்களுக்கு முன் நான் அவரை பார்த்தபோது, உரிய நேரம் வரும்போது ரேஹானை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் கூட சொல்லாமல் சஸ்பென்சாக இதில் அறிமுகப்படுத்திவிட்டார். ரேஹான் நடிப்பை பார்க்கும் போது அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது என்று பாராட்டினார்”

இந்த படத்தின் இசைத்தட்டை தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா வெளியிட, கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் டைகர் கோபால். இவரது மகன் கௌசிக் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இருபது வருடங்களுக்கு முன்பு கனல்கண்ணன் மாஸ்டரிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் இந்த டைகர் கோபால்.

வரும் மார்ச் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.