தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிராந்திய தணிக்கை அதிகாரி (Regional Censor Officer) அனுமதி வழங்கி உத்தரவு அளித்துள்ளார்

சென்னை 01 மே 2021தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிராந்திய தணிக்கை அதிகாரி (Regional Censor Officer) அனுமதி வழங்கி உத்தரவு அளித்துள்ளார்.

வணக்கம். அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா தலைமையில் துவக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நடப்பில் அதிகம் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

மேலும் பலர் ஒவ்வொரு மாதமும் இணைந்து வருகிறார்கள்.

நமது சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, நமது உறுப்பினர்களான தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வந்திருக்கிறது.

குயூப் (QUBE) கட்டணத்திற்கான ஒப்பந்தம் செய்வது, OTT தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்வது, FEFSI தொழிலாளர்கள் சங்கத்துடன் பல விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது என பல ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகளை நமது சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது.

இவ்வாறு அனைத்து சேவைகளையும் நமது தயாரிப்பாளர்களுக்கு செய்து வந்தாலும், அவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான சேவைகளான திரைப்பட தலைப்பு அனுமதி மற்றும் விளம்பர அனுமதிகளை நமது சங்கத்தால் உடனே தர முடியவில்லை.

நமது சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த அனுமதி கோரி, தீவிர முயற்சிகள் எடுத்து, பல முறை புது டெல்லி சென்று மத்திய அமைச்சர் முதல் அனைத்து அதிகாரிகளையும் பார்த்து கோரிக்கை வைத்து வந்தோம்.

நமது இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நேற்று (30.4.2021), இந்த அனுமதியை, பிராந்திய தணிக்கை அதிகாரி (Regional Censor Officer) வழங்கி உத்தரவு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இனி நமது சங்க உறுப்பினர்களுக்கு திரைப்பட தலைப்பு அனுமதி மற்றும் விளம்பர அனுமதியை நமது சங்க அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

இனி நமது சங்கம், உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் முழு வீச்சுடன் தர தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும், இந்த சேவைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். புதிதாக திரைப்படம் எடுக்க விழையும் புதிய தயாரிப்பாளர்களும், தமிழ் சினிமாவின் முன்னணி சங்கமாக வளர்ந்து வரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.

கொரானாவின் இரண்டாம் அலை நமது நாட்டில் முழு வீச்சில் உள்ள இந்த நேரத்தில், நமது உறுப்பினர்கள் அனைவரும், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கவனமாக காத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நடப்பு தயாரிப்பாளர்கள் ஒன்று படுவோம். வெற்றி பெறுவோம்.

நன்றி.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,

T. சிவா
பொது செயலாளர்