உலக இயக்கத்துக்கு காரணமான கிரகங்கள்

சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

பிரபஞ்சம் ஒரு நெருப்பு கோளத்தில் இருந்து தோன்றியது. இந்த நெருப்பு கோளமானது பல்வேறு மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் அதிக அழுத்தம், ஆற்றல் உடையது. இந்த ஆற்றலின் காரணமாக நெருப்பு கோளமானது வெடித்து சிதறி, ஒத்த தன்மையுடைய மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து கிரகங்களாக மாறின. இவ்வாறு தோன்றிய கிரகங்கள் பலவற்றில் பூமிக்கு பலன்களை ஏற்படுத்தும் கிரகங்கள் ஏழு. வான் மண்டலத்தில் சூரியனின் சுற்றுப் பாதையும் சந்திரனின் சுற்றுப் பாதையும் ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளே ராகு மற்றும் கேது ஆகும். மொத்தம் 9 கிரகங்கள் உலக இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.

அவைகள்:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது.

இந்த நவக்கிரகங்களில் ராகு, கேதுவை தவிர, ஏனைய கிரகங்கள் சூரியனை மையமாக வைத்து கடிகார முள் சுற்றும் திசையில் வலப்புறமாக சுற்றி வருகின்றன. ராகு – கேது மட்டும் கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்திசையில் சுற்றி வருகின்றன.

சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களில், சூரியனுக்கு அடுத்தடுத்து உள்ள கிரகங்கள் முறையே புதன், சுக்ரன், (பூமி), சந்திரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் நீள் வட்டப்பாதையில் வலப்புறமாக சுற்றி வருகின்றன.

சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

கிரகங்களை சுபர், பாவர் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகியோர் இயற்கை சுபர்களாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் இயற்கை பாவர்களாகும். இதில் தனித்த புதன் சுபர் என்றும், சூரியனோடு சேர்ந்த புதன் பாவர் என்றும், வளர்பிறை சந்திரன் சுபர் என்றும், தேய்பிறை சந்திரன் பாவர் என்றும் கருத்து உண்டு.

மேலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சூரியனை சுற்றி வரும் புதன், சுக்ரன், சந்திரன் உள்வட்ட கிரகங்களாகும். இந்த மூன்று கிரகங்களும் பெண் கிரகங்கள். பூமியின் சுற்றுப் பாதைக்கு வெளியே நின்று சூரியனை சுற்றி வரும் செவ்வாய், குரு, சனி ஆகியவை வெளிவட்ட கிரகங்களாகும். செவ்வாய், குரு, சனி மற்றும் சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் ஆண் கிரகங்களாகும்.

நவக்கிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே, பூமியில் வாழும் சகல ஜீவராசிகளின் விதியை தீர்மானிக்கிறது. மனிதன் உட்பட சகல ஜீவராசிகளையும் தனது கதிர்வீச்சால் வழிநடத்தும் நவக்கிரகங்களின் முழு விவரங்களையும் இந்தப் பகுதியில் காணலாம்.

சூரியன்

நவக்கிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர் இவர். மாறாத குணம் உள்ளவர். பேதமின்றி எல்லாருக்கும் ஒளி கொடுப்பவர். ஒளி இல்லாத இடத்தை கண் இருந்தும் காணமுடியாது. நம் கண்ணுக்குள் ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் செல்பவர். சூரியன் அழியா புகழை கொடுப்பவர். சமூக சேவையில் நாட்டத்தை கொடுப்பவர். எளிமையாக இருக்க கற்றுக் கொடுப்பவர். இரக்க உணர்வை கொடுப்பவர். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால், சூரியனைப் ‘பித்ரு காரகன்’ என்று அழைக்கிறோம்.

சூரியனுக்கு பல பெயர்கள் உண்டு. அவை ஞாயிறு, பாஸ் கரன், தினகரன், பிரபாகரன், ரவி, ஆதவன் உள்ளிட்டவை.

ஒருவருடைய ஜாதகத்தில் சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு சூரியனே பொறுப்பு. ஒருவருடைய ஜாதகத்தில் தந்தையின் நிலையை பற்றி, சூரியனின் பலத்தை வைத்தும், ஒன்பதாம் பாவம் பற்றி சூரியனின் அதிபத்தியம் கொண்டும் அறியலாம். ஜனன கால ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் வலுவாக இருக்கும் போது, அந்த நபருக்கு ஆன்ம பலம், உடல் பொழிவு அதிகாிக்கும். அவர் பொன் நிறமாக இருப்பார். தந்தை, தந்தை வழி உறவுகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தந்தையுடனான நேரடித் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபல மனிதர்களுடன், சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சூரிய ஓரையில் நடக்கும். சிவாலய தரிசனம் கிடைக்கும். அரசு அதிகாரிகளுடன் தொடர்பு அரசு வேலை கிடைக்கும்.

சிம்ம லக்னத்தில் அல்லது சிம்ம ராசியில் பிறந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். சூரிய தசை, புத்தி, அந்தரம் காலங்களில் நன்மை மிகுதியாகும். சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். சிவ பக்தர்களின் நட்பு உண்டாகும். சிவப்பு நிற பொருட்களின் சேர்க்கை. சிவப்பு நிற ஆடைகளின் மீது விருப்பம் உண்டாகும். குடும்பப் பொறுப்பு கள் அதிகரிக்கும். கண்களின் பார்வை சக்தி மிகுதியாக இருக்கும். மலைப் பிரதேசம் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சமூக சேவைகளில் நாட்டம் உண்டாகும்.

10-ம் இடத்தில் சூரியன் சம்பந்தப்பட்டு இருந்தால், அந்த ஜாதகர் தந்தையின் தொழிலை செய்வார். ஒருவரின் ஜாதகப்படி தொழிலை தரக்கூடிய கிரகம் சூரியனாக இருந்தால், அரசு உத்தியோகம், அரச பதவி கிடைக்கலாம். பரிசு- பாராட்டு குவியும்.

ஒன்பதாம் பாவத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்து, சூரியனும் பலமின்றி இருந்தால், அந்த ஜாதகருக்கு ஆன்ம பலம் குறையும். மன அமைதியும் இருக்காது. தந்தை, தந்தை வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் கிடைக்காது. கடவுள் நம்பிக்கை இருக்காது. உஷ்ண நோய், கண் நோய், பித்த நோய், தலைவலி உண்டாகும். ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பு நடத்துவர். அரச தண்டனை கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை குறையும். பொறுப்பற்றவராக இருப்பார்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி