எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதை இனி எந்த தயாரிப்பாளரும் பேசக் கூடாது மீறி பேசும் பட்சத்தில் எங்களது பதில் இதைவிடக் கடுமையாக இருக்கும்..” திருப்பூர் சுப்பிரமணியம்.
2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள்’ திரைப்படங்களையும் OTT வெளியீட்டுக்குக் கொடுத்து விட்டால் நாங்கள் என்ன செய்வது என்பதால் தான் தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பிரச்சினை அதிகளவில் வலுத்து வருகிறது.
திரைப்படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாவதற்கு அனைத்து தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆதரவும், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பும் அதிகளவில் வலுத்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் கொந்தளித்திருப்பதாவது,
“கடந்த சில தினங்களாக சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்களை அவரவர் வசதிக்கேற்ப வறுத்து எடுத்து வருகின்றீர்கள்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது.
இதில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது தப்பித்து கொள்கிறோம் என கூறுவது எந்த வகையில் நியாயம்..? இது நாள் வரையிலும் நாம் அனைவரும் ஒண்ணு மண்ணாகத்தானே இருந்தோம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பிரச்னை முடிந்து திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்படும் போது எல்லா திரையரங்குகளுக்கும் திரைப்படம் வேண்டும். முடிந்து தயாராக இருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற ஒன்றிரண்டு திரைப்படங்களையும் OTT வெளியீட்டுக்குக் கொடுத்து விட்டால் நாங்கள் என்ன செய்வது என்ற உரிமையில்தான் அதனைத் தட்டிக் கேட்டோம்.
கடந்த நான்கு வருடங்களாக எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் ‘சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் தர மறுக்கிறீர்கள் என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறாரிகள்
என எங்களை நோக்கி எந்த அடிப்படையில் விமர்சனம் செய்தீர்கள்..? நாங்களாவது சிறு பட்ஜெட் திரைப்படங்களை தியேட்டரில் திரையிட்டுக் கொடுத்துள்ளோம். திரைப்படத்தின் வரவேற்புக்கு ஏற்ப காட்சிகளை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளோம்.
‘எந்த தியேட்டரிலும் ஒழுங்கான கணக்கு வருவதில்லை’ என கூறுகிறீர்கள். எல்லா விநியோகஸ்தர்களும் முறையான கணக்குகளை வாங்கிக் கொண்டுதான் உள்ளனர்.
எங்கோ, ஒன்றிரண்டு இடங்களில் நடக்கும் தவறுகளை பொதுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?
அமேஸானில் எல்லா திரைப்படங்களையும் வாங்கப் போவது இல்லை. திரையரங்குகளில் ஓடி அதிக வருவாய் ஈட்டிய திரைப்படங்களைத்தான் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
சிறு பட்ஜெட் திரைப்படங்களை வருவாயில் பங்கு தருவதாகத்தான் திரையிடுகின்றனர்.
அப்படி அமேஸானுக்கு படம் கொடுத்த தயாரிப்பாளர்கள் தற்போது அவர்களிடமிருந்து கணக்கு வாங்க முடியாமல் பட்ட அவஸ்தையை கூற தொடங்கியுள்ளனர்.
எங்களுடைய படத்தை எப்படி, எதில், ரிலீஸ் செய்வது என்பது எங்கள் உரிமை. அதில் தலையிட நீங்கள் யார் என கேட்கும் தயாரிப்பாளர்களே…
இதேபோல் எங்களது சொந்த முதலீட்டில் கட்டப்பட்டிருக்கும் திரையரங்குகளில் எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதை இனி எந்த தயாரிப்பாளரும் பேசக் கூடாது.
சினிமா சம்பந்தமான முக்கியமான அரசின் பேச்சுவார்த்தை கூட்டங்களில்கூட தியேட்டர்களில் பாப்கார்ன் கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாக பொருத்தமற்ற குற்றசாட்டை எழுப்பினீர்கள். முதல்வர் வரையிலும் இந்தக் குற்றச்சாட்டை கொண்டு சென்று பாப்கார்னைத் தமிழகத்தில் பிரபலப்படுத்தியவர்கள் நீங்கள்தான்.
“தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் இவை எல்லாமே தியேட்டர் நிர்வாகம் சம்பந்தப்பட்டது.
இதில் தமிழக அரசு தலையிட முடியாது…” என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறிய பிறகும் அதனை நீங்கள் இன்றுவரை விட்டபாடில்லை.
இனி எந்த ஒரு தயாரிப்பாளரும் திரையரங்குகள் பற்றி, பாப்கார்ன், பார்க்கிங் கட்டணம் பற்றி எங்கும் எப்போதும் பேசக் கூடாது. மீறி பேசும் பட்சத்தில் எங்களது பதில் இதைவிடக் கடுமையாக இருக்கும்..” என்று அவர் கூறியுள்ளார்.