கமலின் சர்ச்சை பேச்சு குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்
சமீபத்தில் கரூரில் பிரசாரத்தின் போது பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசினார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு, முதல்வர் உள்ளிட்ட பலரும் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் வலுத்ததால் கமல் 2 நாட்களாக பிரசாரங்களை ரத்து செய்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, “மத சகிப்புதன்மை வேண்டும் என்றே கமல் பேசினார். அனைத்து மதக்குழுக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், மதத்தில் எந்த வடிவிலும் பயங்கரவாதம் இருப்பதற்கு கண்டனமும் தான் தெரிவித்தார். கமலின் இந்த கருத்துக்கள் முற்றிலும் மாற்றி கூறப்பட்டுள்ளது. கொடூர எண்ணத்துடன் அவரது பேச்சிற்கு இந்து விரோத சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த பெரிய சதித்திட்டத்திற்கு தொடர்பில்லாத சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது