கொலைகாரன் – திரை விமர்சனம்

நடிப்பு – அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால். நாசர். சிதா மற்றும் பலர்..

தயாரிப்பு – தியா மூவீஸ்

இயக்கம் – ஆண்ட்ரூ லூயிஸ்

இசை – சைமன் கே கிங்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 7 ஜுன் 2019

ரேட்டிங் – 3.50/5

அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் கதாநாயகன் விஜய் ஆண்டனி, தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் கதாநாயகி ஆஷிமா நர்வாலை தினமும் பார்த்து விட்டுதான் செல்வார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு இருந்து வருகிறது.

படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதை ஓரளவிற்குப் புரிய வைத்துவிடும். ஒரு கொலையைச் செய்த கொலைகாரனே தான்தான் கொலை செய்தேன் என சொல்லி போலீசில் சரண்டர் ஆனாலும், அவன்தான் கொலை செய்திருப்பானா என சந்தேகப்படுகிறது போலீஸ். அந்தக் கொலையில் உள்ள மர்மங்கள் எப்படி ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுகிறது என்ற அழுத்தமான, யூகிக்க முடியாத திரைக்கதைதான் இந்த கொலைகாரன்.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ், ஒரு வித்தியாசமான த்ரில்லர் படத்தைக் கொடுக்க வேண்டும் என சரியாக பிளான் போட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

கேமரா கோணங்கள், எடிட்டிங் யுக்தி, சஸ்பென்ஸ் அவிழ்க்காத, நம்மையும் யூகிக்க வைக்காத திரைக்கதை என எழுத்தில் என்னவெல்லாம் எழுதினாரோ அதை திரையில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு இயக்குனருக்கான பெரிய வெற்றியே அதில்தான் அடங்கியிருக்கிறது. பேப்பரில் உள்ளதை திரையில் ரசனையுடன் கொண்டு வந்து ஒரு இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், பாதி உடல் எரிந்து எரியாமலும் நிலையில் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்.
போலீசுக்கு தகவல் கிடைக்கிறது.

அந்தக் கொலையை துணை போலீஸ் கமிஷனரான அர்ஜுன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். கொலை செய்யப்பட்ட நபருக்கும், கதாநாயகியான அஷிமா நர்வாலுக்கும் இடையில் பழைய பகை ஒன்று இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.

விசாரணையில் இறந்த நபர் ஆந்திராவில் உள்ள ஹைதராபாத் இருக்க கூடிய அமைச்சரின் தம்பி என்று தெரிய வருகிறது. மேலும் இறந்த நபர், கதாநாயகி ஆஷிமாவிற்கு நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்திருப்பதால்,
கதாநாயகி ஆஷிமாவும், அவருடைய அம்மா சீதாவும் அந்தக் கொலையை செய்திருப்பார்களா என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது. இந்த கொலையில் எதிர் வீட்டில் உள்ள கதாநாயகன் விஜய் ஆண்டனி உதவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கிறார். உயர் அதிகாரியான அர்ஜூன்

ஆஷிமாவின் எதிர் வீட்டில் இருக்கும் கதாநாயகன் விஜய் ஆண்டனி மீது போலீஸ் அதிகாரி அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது.
விஜய் ஆண்டனியை பற்றி விசாரிக்கும் போது, ஆந்திரா போலீஸில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என தெரியவருகிறது

இறுதியில் அந்த கொலையை செய்தவர் யார் என்று அர்ஜூன் கண்டுபிடித்தாரா? ஆஷிமாவிற்கும் இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? விஜய் ஆண்டனி ஆந்திரா போலீஸில் இருந்து வெளியே வந்ததற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் விஜய் ஆண்டனியே அந்தக் கொலையை நான்தான் செய்தேன் என போலீசில் சரண்டர் ஆகிறார். அவர்தான் அந்தக் கொலையை செய்தாரா, அவர் செய்ய என்ன காரணம், அவருக்கும் கதாநாயகி ஆஷிமாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான கதை.

படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி, இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். கடைசி வரை முகத்தில் மர்மம் இருப்பதை உணர்த்தி நடித்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அர்ஜூன். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் இருவரும் கதாநாயகர்கள்தான். இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். துணை போலீஸ் கமிஷனராக அர்ஜுன். எத்தனையோ படங்களில் அவரை போலீஸ் அதிகாரியாகப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் கூடுதல் கம்பீரம், மிடுக்குடன் தெரிகிறார். அலட்டல் இல்லாத ஆர்பாட்டம் இல்லாத யதார்த்தமான ஒரு போலீஸ் அதிகாரியாக அவருடைய அனுபவத்திலும் அவர் நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார் அர்ஜுன். கூர்மையான பார்வை, கவனம், விசாரிக்கும் கோணம், நடை, உடை, உடல் மொழி என போலீஸ் கதாபாத்திரங்களில் இனி நடிக்கப் போகிறார்கள் கூட அர்ஜுனின் இந்த கார்த்திகேயன் கதாபாத்திரத்தை ஒரு ரோல் மாடல் ஆக வைத்துக் கொள்ளலாம்.

இறுக்கமான முகம், சிரிக்கத் தெரியுமா என கேள்வி கேட்கும் அளவுக்கு முகம், எப்போதும் ஒரு வெறுப்புடனே காணப்படும் தோற்றம், இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் சும்மா விடுவாரா நாயகன் விஜய் ஆண்டனி. அவருக்காகவே உருவாக்கிய கதாபாத்திரம் போல பிரபாகரன் என்கிற கதாபாத்திரம். இவர் யார், இவர் பின்னணி என்ன ஒவ்வொன்றாக முடிச்சை அவிழ்க்கிறார் இயக்குனர்.
ஆண்ட்ரூ லூயிஸ்
இவரும் ஒரு ஐபிஎஸ் ஆபிசர் என இடைவேளையில் நமக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார்கள். கடைசியில் சென்டிமென்ட்டிலும் நம்மைக் கொஞ்சம் கண்கலங்க வைக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் கடைசியாக நடித்த சில படங்களின் தோல்வியை இந்த கொலைகாரன் சரி செய்துவிடும். விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கம் பேக் மூவிதான்.

அறிமுக நாயகி அஷிமா நர்வால், படம் முழுவதும் பதட்டத்துடனேயே இருக்கும் ஒரு கதாபாத்திரம். தான்தான் தவறு செய்தவராக இருந்தாலும் அந்தத் தவறைச் செய்ததை காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டும். முதல் படத்திலேயே ஒரு சவாலான கதாபாத்திரம்தான். மொழி தெரியாமல் அந்த முகபாவங்களில் நடிப்பதும் சிரமம்தான். ஆனால், அதையெல்லாம் துளியும் காட்டிக் கொள்ளாமல் மற்ற படங்களில் நடிக்கும் நாயகி போல் இல்லாமல் இப்படத்தில் ஆஷிமாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார்.
இயல்பாக நடித்திருக்கிறார்.

அர்ஜுனுக்கு உதவும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நாசர், வருகிறார் அஷிமாவின் அம்மாவாக சீதா, தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் .
இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள். சம்பத் ராம் மற்ற கதாபாத்திர நடிகர்களில் குறிப்பிட வைப்பவர்கள்.

ஒரு கொலை, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவம் என கிரைம் திரில்லர் பாணியில் ஆண்ட்ரூ லூயிஸ். இப்படத்தை பார்க்கும் போது, ஏற்கனவே வெளியான சத்யராஜ்
நடிப்பில் வெளிவந்த விடிஞ்சா கல்யாணம் படத்தின் சாயலாகவும், கமலின் பாபநாசம். வேட்டையாடு விளையாடு
காக்க காக்க ஆகிய படங்களில் சாயலாகவும் தோன்றுகிறது.

படத்தின் மிகப் பெரும் பலம் சைமன் கே கிங்-கின் பின்னணி இசை. அதிலும் படத்திற்கான தீம் மியுசிக்கில் அந்தக் காட்சிகளுக்கான டெம்போவை இன்னும் அதிகப்படுத்துகிறது. படப்பிடிப்புக்கு முன்பே காமிரா கோணங்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என டிராயிங் செய்து பின்னர் படப்பிடிப்பு நடத்தியிருக்க வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் முகேஷின் ஒளிப்பதிவில் சிறப்பான நேர்த்தி இருக்கிறது.

ஒரு காட்சியை முழுவதுமாக முடிக்காமல், அதன் சஸ்பென்சை அப்படியே வைத்து, அதை பின்னர் வெளிப்படுத்தும் விதமான படத்தொகுப்பு டெக்னிக்கில் குழப்பமில்லாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் ரிச்சர்ட் கெவின்.

இடைவேளைக்குப் பின்னும் படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஆகவே நகரும் என எதிர்பார்த்தால் விஜய் ஆண்டனியின் பிளாஷ்பேக், அவர் ஒரு மனநோயாளியோ என சந்தேகப்பட வைப்பது, அவருக்கும் அஷிமாவுக்கும் காதல், நாசர் விசாரிப்பது ஒரு கோணம், அர்ஜுன் விசாரிப்பது மற்றொரு கோணம் என நம்மை கொஞ்சம் ரிலாக்ஸ்டாக யோசிக்கவிடாமல் காட்சிகள் அடுத்தடுத்து திருப்பங்களுடன் கொஞ்சம் திணறவும் வைக்கிறது. இடைவேளை வரை அதிக சிக்கலில்லாமல் தெளிவாக நகர்கிறது திரைக்கதை. இடைவேளைக்குப் பின் அவ்வளவு திருப்பங்கள் வேண்டுமா எனவும் கேள்வி கேட்க வைக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை படம் சீரியசான உணர்வுடன் மட்டுமே நகர்கிறது. கடைசியில் ஒரு பழிவாங்கும் கதையாக முடிவதும் எதிர்பாராதது.

இருப்பினும் சமீப காலத்தில் இப்படி ஒரு திரில்லர் படத்தை நாம் பார்க்கவில்லை என்பது படத்திற்கான பிளஸ் பாயின்ட். 

மொத்தத்தில் கொலைகாரன் – மக்கள் மனதை கொள்ளையடித்த கொள்ளைக்காரன் .