Friday, June 18
Shadow

சப்பாத்தி சுடுவது எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள்?.. பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

என்றும் அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன்.

முதலில் உங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் கொடுக்கப்படவில்லையோ அது போல் ஊரடங்கு உத்தரவிற்கும் கொடுக்கப்படவில்லை.

நீங்கள் இந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

மேலும் இந்த நெருக்கடியான சமயத்தில் 1.4 பில்லியன் மக்கள் இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறார்கள்.

ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால் அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் இல்லை. நீங்கள் சொன்னால் செய்கிறார்கள்.

கொரோனாவை ஒழிக்க இரவு பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பணமதிப்பிழப்பின் போது நடந்த அதே தவறு இப்போதும் நடக்கிறதோ என்ற மிகப் பெரிய அச்சுறுத்தல் எனக்கு ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பின் போது எப்படி ஏழைகள் தங்களது சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனரோ அதே போல் இந்த முறையாக திட்டமிடப்படாத லாக்டவுனால் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழைகளின் துயரை துடைக்க உங்களைத் தவிர வேறுயாருமில்லை.

ஒரு பக்கம் அனைவரையும் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். மறுபக்கம் ஏழைகள் தங்களின் இயலாதனத்தை எண்ணி வருந்துகிறார்கள். பால்கனிகளில் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஏழைகளோ அடுத்த வேளை உணவான சப்பாத்தி செய்ய போதுமான எண்ணெய் இல்லாமல் போராடுகிறார்கள்.

கடந்த இரு முறை நாட்டுமக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்சினைகளை சந்திக்கும் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். இது போன்ற உளவியல் ரீதியிலான நுட்பங்கள் பால்கனியில் இருக்கும் மக்களின் கோபத்திற்கே தீர்வு காணும்.

தலை மேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காகவே இயங்கும் பால்கனி அரசாக நீங்கள் இருக்க விரும்பவில்லை

Read Also  STR ஒரு கதையுடன் காத்திருக்கும் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி

என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஏழை மக்களை புறக்கணிக்கும் அரசுகள் கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. தினக்கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி டிரைவர்கள், புலம்பெயர்ந்த மக்கள் என லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள்.

நடுத்தர மக்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக நாம் நடுத்தர மக்களை புறக்கணிக்க வேண்டும் என்பது எனது ஆலோசனை அல்ல. அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோருகிறேன். பசியால் யாரும் வாடக் கூடாது என்பது உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஏழைகள் பசி, சோர்வு, வறுமையால் வாட வழி வகை செய்து வருகிறோம்.

ஏழைகள் பசி, சோர்வு, வறுமையால் வாடுவது என்பது கோவிட் 19-டன் ஒப்பிடும் போது மிகவும் அபாயகரமானது. கொரோனா நம்நாட்டை விட்டு சென்றாலும் மேற்கண்ட மூன்றின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இந்தியாவில் மறையவே மறையாது. இன்றைய மற்றும் நாளைய இந்தியாவை சிறந்ததாக்க அறிவார்ந்த செயல்களை செய்ய வேண்டும். காந்தி, பெரியார் ஆகியோர் அறிவாளிகளாக இருந்தனர். அப்படி இருந்தால் மட்டுமே அனைவருக்குமான சரியான பாதை, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றை தேர்வு செய்ய முடியும். சீனாவில் டிசம்பர் 8-ஆம் தேதியே கொரோனா நோய் பாதித்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.

கொரோனாவின் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை உலக நாடுகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே அறிந்து கொண்டன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அறியப்பட்டார். இத்தாலிக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இன்னும் நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி?

தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் 4 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என இந்திய மக்களுக்கு நீங்கள் உத்தரவிட்டீர்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 4 மாதங்கள் முழுசாக இருந்த நிலையில் நீங்கள் வெறும் 4 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு நேரம் கொடுத்தீர்கள். தொலைநோக்கு பார்வை உள்ள தலைவர்கள் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதற்கு முன்னரே தீர்வு காண நடவடிக்கை எடுப்பர்.

இதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன். உங்கள் தொலைநோக்கு பார்வை தவறிவிட்டது. நான் தேசத்திற்கு விரோதமானவன் என்னை யாராவது கூறினால் கூறட்டும். இயல்பான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்காகவே மக்கள் அரசை நியமித்து ஊதியம் கொடுத்து வருகிறார்கள். நாங்கள் கோபத்துடன் இருந்தாலும் உங்கள் பக்கம் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

CLOSE
CLOSE