சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியது குறித்து ஒட்டு மொத்த படக்குழு முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கிறது.

இது குறித்து விவரித்த இயக்குநர் சஞ்சய் பாரதி, “கிட்டத்தட்ட ஒரு கனவு நனவானதைப்போலத்தான் இருக்கிறது. எல்லோரையும்போல நானும் தலைவர் ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகன்தான். அவர் நடித்த படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க இதுவரை நான் தவறியதே இல்லை. என் தந்தை சந்தான பாரதி, ரஜினி சாரின் நெருங்கிய நண்பர் என்றாலும், இயக்குநராக எனது பணியை அவர் பார்த்துப் பாராட்டியது என்னால் மறக்க முடியாத தருணம். வண்ணமயமான தனுசு ராசி நேயர்களே டீஸருக்காக ஒட்டுமொத்த படக்குழுவையும் வெகுவாகப் பாராட்டினார் ரஜினி சார்.

படத்தலைப்பு எவ்வாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று பாராட்டினார். ரஜினி சார் பாராட்டியது வெறும் முகஸ்துதிக்காக அல்ல. நிஜமான ஈடுபாட்டுடன் படத்தைப் பற்றியும், படக்குழுவைப் பற்றியும் கேட்டறிந்தார். மிகுந்த ஆர்வத்துடன் என்னைப் பற்றியும் நான் யாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன் என்றும் கேட்டார். இயக்குநர் விஜயிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை விவரித்தேன். படம் எப்போது வெளியாகிறது என்று அவர் கேட்க, நான் ரிலீஸ் தேதியே சொன்னதும், சரியான நேரத்தில்தான் வெளியிடுகின்றீர்கள் என்று சொன்னார்” என்றார் இயக்குநர் சஞ்சய் பாரதி..

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ரிபா மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஸி இருவரும் கதாநயாகி வேடங்களில் நடிக்க, ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, மற்றும் சில நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். குபேந்திரன் படத்தொகுப்பை கவனிக்க, உமேஷ் ஜே குமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். விவேகா, மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், சந்துரு ஆகியோர் பாடல்களை எழுத, எம்.ஆர்.பொன் பார்த்திபன் வசனங்களைத் தீட்டுகிறார். ஆடியோகிராபி பொறுப்பை டி.உதயகுமாரும், ஆடை அலங்காரப் பொறுப்பை ஜி.அனுஷா மீனாக்ஷியும் ஏற்றிருக்கின்றனர். கல்யாண்-ஷெரீப் நடனக் காட்சிகளை அமைக்கின்றனர்.