தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்திக் மீது நடிகை பாலியல் புகார்
பிரபல மலையாள நடிகர் சித்திக். இவர் தமிழில் அஜித்தின் ஜனா, அர்ஜுனுடன் சுபாஷ், கவுதம் கார்த்திக்கின் ரங்கூன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சித்திக் மீது இளம் மலையாள நடிகையான ரேவதி சம்பத் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘நான் கடந்த 2016–ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் ‘சுகமாயிருக்கட்டே’ என்ற மலையாள படத்தை பார்த்தேன். அப்போது எனக்கு வயது 21. அங்கு நடிகர் சித்திக் என்னை சந்தித்தார். தமிழ் படமொன்றில் நடிப்பது சம்பந்தமாக பேச வேண்டும் ஓட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டார். என்ன பேச வேண்டும் என்றேன்.
பிறகு நேரடியாகவே என்னை அனுசரிக்க தயாராக இருக்கிறாயா? என்றார். ஆசைக்கு இணங்கும்படி பாலியல் தொந்தரவு கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன். உடனே கோபத்தில் வெளியே போ உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று கத்தினார். சித்திக்குக்கு என்னைப்போல் ஒரு மகள் இருக்கிறாள். அந்த பெண் அவரிடம் பாதுகாப்பாக இருப்பாளா?
உங்கள் மகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? ஆனால் வெளியில் நல்லவர் போல் முகமூடி அணிந்து திரிகிறார். இது வெட்கக்கேடு. மலையாள நடிகைகள் நல அமைப்பை குறை சொல்ல இவருக்கு அருகதை இல்லை’’.
இவ்வாறு ரேவதி சம்பத் கூறியுள்ளார். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.