தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ரத்து உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ரத்து உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு

கடந்த ஆண்டு 2019 ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்களை இட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் நடிகர் ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேர்தல் முடிந்து 6 மாதம் ஆன நிலையிலும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவில்லை.

இதன் பின்னர் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே உள்ள தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்துவிட்டதால் அவர்களின் முடிவுகளும் செல்லாது எனவும் அவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் எனவும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்களில் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த பின்பும், பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் அப்போது, பதவிக்காலம் முடிந்த நிர்வாகிகளே சங்கத்தை நிர்வகித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு பிப்ரவரி 12ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.