தோல்வி ஒரு பயிற்சி : மாணவர்களுக்கு கஸ்தூரி அறிவுரை

இந்தாண்டு மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 59,785 மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி என்பவர், இந்திய அளவில் 57வது இடமும், தமிழகத்தில் முதல் இடமும் பெற்று தேறி இருக்கிறார்.

ஆனால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரிது ஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷ்யா என்பவரும், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கின்றனர். இந்நிலையில், சமூகப் பிரச்னைகள் அனைத்துக்கும் தன்னுடைய கருத்தை, டுவிட்டரில் பதிவிடும் நடிகை கஸ்தூரி, இந்த தற்கொலைகளுக்கும் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது:

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அது செய்தி.
நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தாற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ள வேண்டும். நம்மவர்கள் பலரும், யாராவது தடுக்கிவிட்டால், அதை சொல்லிக் காட்டியே அந்த நபரை மன உளைச்சலில் வீழ வைப்பதில் சூரர்கள். மற்றவர் கஷ்டத்தில் மீன் பிடிக்கும் கில்லாடிகள். தயவு செய்து சிறார்கள் படிப்பு; வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடக்கலாமே?

தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று, மீண்டும் முயலவும்; வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும்; ஆசிரியர்களும் நல்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில், பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு முதலில் கவுன்சிலிங் தேவைப்படுகிறது!

இது போதாது என்று, அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள், உண்மையாகவே கொள்கை ரீதியாக நீட்டை எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக் கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அவரைப் போல தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

பிள்ளைகளே, நீங்கள் நினைக்கலாம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே போயிற்று, உங்கள் பலவருட கனவு தவிடுபொடியாயிற்று என்றெல்லாம். ஆனால், உண்மை என்ன தெரியுமா? வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்கு தெரியும்? இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார். நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்? இன்னும் சொல்ல போனால், இந்த உலகம் ஒரு பரிட்சையோடு நின்று விடுமா? எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகள் உங்களுக்காகவே காத்துகொண்டு உள்ளன தெரியுமா?

சந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லையே! உலகம் உருண்டை. சுழலதான் செய்யும். இல்லையா? பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும். இருள் வந்தால், அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள்? இருளை பார்த்து மிரண்டு அவசரப்பட்டு வெளிச்சத்தை பார்க்காமலே போய் விடலாமா?

நாளை வாழ்க்கையில், இன்னும் எவ்வளவோ ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரலாம், நம்மில் பெருவாரியானவர்களுக்கு வாழ்க்கை என்பதே போராட்டம்தானே ? அந்த போராட்டத்தில் ஜெயிக்க, இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக் கொள்ளுங்கள் செல்லங்களே! என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்களே!

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

கஸ்தூரியின் பதிவை பலரும் வரவேற்றுள்ளனர்.