மக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் இது.
மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கும் அரசின் நோக்கம், உத்வேகம் எல்லாமே மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதை தெளிவாக காண்பிக்கும் அதே நேரத்தில், அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தமிழக அரசியலில் தொடங்கியிருக்கும் ஆரோக்கியமான மாற்றத்தையும் காட்டுகிறது.
தமிழகத்தில் பிற கட்சிகள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கருப்பு சட்டை போராட்டங்களும், வாசலில் கூச்சல்களும் போட்டு பெயரளவுக்கு எதிர்ப்பைக் காண்பித்துக் கொண்டிருந்த வேளையில், மக்களுக்கு சரியானவற்றை செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் எங்கள் தலைவர் திரு. கமல் ஹாசன், நீதிமன்ற கதவுகளை தட்டுவது தான் சரியான தீர்வைத் தரும் என்று சட்ட ரீதியாக இதை எதிர்கொண்டார். மூத்த வழக்கறிஞர் திரு. A.R.L. சுந்தரேசன் அவர்கள் தலைமையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்காட, முன்னிருந்த பொது நல வழக்குகளும் குவிந்திட, சென்னை உயர் நீதிமன்றம் நம் மக்களின் குரலுக்கு செவி சாய்த்து மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த ஒரே அரசியல் கட்சி என்ற நிலையில் இருந்து, தமிழக அரசின் மேல் முறையீட்டை எதிர்த்து தமிழகத்தின் மூத்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது, மக்கள் விரும்பும், மக்கள் நீதி மய்யம் கையில் எடுக்கும் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் தமிழகத்தில் தொடங்கி விட்டது என்பதையே காட்டுகிறது. தமிழக அரசியலில் நாங்கள் கொண்டு வரவேண்டும் என நினைக்கும் தீர்வுகளை நோக்கிய அரசியலின் முதல் படி இது.
சட்டரீதியான போராட்டங்கள் தான் மக்களுக்கு தீர்வுகளைத் தரும் என்பதை, மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்திருந்ததோடு, பிற கட்சிகளையும் நீதிமன்ற படிகளை ஏற வைத்துள்ளது. தமிழகத்தின் மூத்த கட்சிகள் நீதிமன்ற கதவுகளை தட்டுவது, மக்களுக்கு சட்ட ரீதியாக போராட்டங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அரசோ, தனியாரோ மக்களுக்கு அநீதி இழைக்கும் போது அதற்கு மக்களுக்கு ஊறு விளைவிக்காத சட்ட ரீதியான போராட்டமே, மக்களுக்கு பாதுகாப்பான தீர்வு என்பதை உறுதியாக நம்பும் நேரத்தில், போராட்டங்கள், நம் உணர்வுகளின் வெளிப்பாடு என்பதையும், மக்கள் பிரச்சினையில் தீர்வுகளுக்கு அது கடைசி ஆயுதம் என்பதையும் மக்கள் நீதி மய்யம் நம்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். அதே நேரத்தில், மக்கள் நலனை காற்றில் பறக்க விட கோலாகலமாக தயாராகும் இந்த அரசுக்கான தீர்ப்பை வழங்கிட மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டும்.
நாளை நமதே!
நன்றி
டாக்டர்.R.மகேந்திரன்
துணைத் தலைவர்
மக்கள் நீதி மய்யம்.