மலையாளத்தில் சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்

மலையாள நடிகர் பிருத்விராஜ் முதன் முறையாக இயக்கிய படம் ‘லூசிபர்.’

மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிபர்’ படம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியானது. அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார்.

படப்பிடிப்பு தொடங்கியது முதலே பலத்த எதிர்பார்ப்பில் இருந்த இந்தத் திரைப்படம், வெளியாகி ரசிகர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்திருக்கிறது ‘லூசிபர்.’

அதோடு ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களை நெருங்கிய வேளையில் 101 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ‘லூசிபர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்த நிலையில், 119 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகம் பற்றிய பேச்சு தற்போது எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில் இதுபற்றிய கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில் கதாசிரியர் முரளி கோபி, அதற்கான பதிலை சூசகமாக வெளியிட்டிருக்கிறார். அவர் ‘ரசிகர்களின் காத்திருப்பு நீண்ட நாட்கள் நீடிக்காது’ என்று கூறியிருப்பதன் மூலம், ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகம் வெளிவரும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.