முதல்வர் ஜெயலலிதா அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. நான் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.

அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது