ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு – முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்

இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.

தற்போது இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார். 

மேலும், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.