மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி !

மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி !

சென்னை 06 மே 2026 ராஜஸ்தானில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டது முதல் பேச இயலாத நிலையில் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் எனது முதல் தயாரிப்பாளர், எனது வழிகாட்டி மட்டுமல்ல, அவர் ஒரு தெய்வத் திருவுருவம். இன்று நான் ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கியமானக் காரணம் திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் “உதயாவை நான் அறிமுகப்படுத்துகிறேன்” என்று கூறி, கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘திருநெல்வேலி’ திரைப்படத்தின் மூலம் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பல இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒரு கதாநாயகனாக முதன்முறையாக அறிமுகப்படுத்தியது என்னைத் தான் என்பது எனக்கு எப்போதும் பெருமையும், நெகிழ்ச்சியும் அளிக்கும் விஷயம். அந்தத் தருணமே எனது வாழ்வின் தொடக்கமாகும்.

அவர் ஒரு தந்தை நிலையில் இருந்து என்னை அரவணைத்தாலும், ஒரு சிறந்த நண்பராகவும் பழகினார். திரையுலகின் தற்போதைய வணிகச் சூழல் மற்றும் சவால்களைப் பற்றி எங்களிடம் வெளிப்படையாக உரையாடுவார். ஜீவா, ரமேஷ் மற்றும் நான் என அனைவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். அவர் தான் அறிமுகப்படுத்திய கதாநாயகர்களையும் சரி, இயக்குநர்களையும் சரி, தன் சொந்தப் பிள்ளைகளாகவே கருதி அன்பு செலுத்தினார். திறமை வாய்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

உடல்நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு, என்றும் உற்சாகத்துடன் செயல்பட்ட அவர், எங்களுக்குப் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நான் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டபோது, “இன்றைய இண்டஸ்ட்ரி சூழலில் உனக்கு இது தேவையா? நீ ஒரு நல்ல நடிகன், நடிப்பில் கவனம் செலுத்து. ஆனால் நீ தயாரிப்பாளராகவும் ஜெயித்தால் உன்னை விட நான் தான் அதிக சந்தோஷப்படுவேன்,” என்று உரிமையுடன் அறிவுரை கூறினார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிட்ட போதும் எனக்கு அறிவுரை வழங்கினார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் கதாநாயகனாக என்னைப் பெருமைப்படுத்தியவர் அவர். நடிகர் சங்கத் தேர்தலாக இருந்தாலும் சரி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்.

நேற்று ஒரு விபத்தின் மூலம் அவரை நாம் இழந்துவிட்டோம் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் அவரிடம் ஆசி பெறுவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அத்தகைய ஒரு பேராளுமையை இன்று இழந்திருப்பது திரையுலகிற்கே பேரிழப்பாகும்.

ஜீவா, ரமேஷ், சுரேஷ் சார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மகனாக நான் கூறுகிறேன்: “அப்பா, நீங்கள் என்றும் எங்களோடுதான் இருக்கிறீர்கள்.” இந்த விபத்துச் செய்தியை என்னால் ஏற்க முடியவில்லை. இப்போதும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நீங்கள் இருப்பதைப் போலவே நான் உணர்கிறேன்.

உங்கள் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் என்றும் எங்களது தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்துவீர்கள். ‘ஆர்.பி. சௌத்ரி வழங்கும்’ என்ற வாசகம் மீண்டும் திரையில் ஒளிர வேண்டும் என்பதும், உங்கள் பணி தொடர்ந்து இன்னும் பல புதிய திறமைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதுமே எனது விருப்பம்.

error: Content is protected !!