இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!
இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!
சென்னை 12 மே 2026 BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”.
இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது.
வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நண்பர்கள் அல்லது பணியிடத்தில் இருக்கும் சக ஊழியர்களின் வெற்றி, தோல்விகள் நம்மை பெரிதாக பாதிக்காமல் கடந்து போய்விடும். ஆனால் சிலரின் வெற்றி மட்டும் நமக்கே ஒரு தனி மகிழ்ச்சியை தரும். ‘நம்முடன் இருந்தவர் இன்று உயர்ந்து நிற்கிறார்’ என்ற பெருமிதம் மனதில் தோன்றும்.
அப்படிப்பட்ட நெருக்கமான வட்டாரத்தில் எனக்கு மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாபு விஜய். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரு பைக் ரேஸில் ஒரே நேரத்தில் வண்டியையும் ஓட்டிக்கொண்டு, பெட்ரோல் கேனையும் சுமந்து கொண்டு வெற்றியை நோக்கி செல்லுவது எவ்வளவு கடினமோ, அதே அளவுக்கு சவாலான விஷயம்தான் முதல் படத்தை தயாரித்து இயக்குவது.
அந்தப் பொறுப்பும் போராட்டமும் என்ன என்பதை நன்றாக புரிந்துகொண்டதால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் இந்தப் படத்திற்கு ஆதரவாக நின்று, என்னால் முடிந்த முழு உழைப்பையும் கொடுத்தேன்.
இந்தப் படம் அந்த அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் உரிய வெற்றியை கண்டிப்பாக பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் வெற்றி பெறும் நேரத்திலும் நீங்கள் அனைவரும் இதே அன்பும் ஆதரவும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெய் முரளி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.”
உடை வடிவமைப்பாளர் கமலி பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஜெய் சாருக்கும், இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக என்னை நம்பி இணைத்த பாபு சாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்களிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் சார். இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
குறிப்பாக என் நெருங்கிய தோழி மீனாட்சிக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகளும் வெற்றிக்கான நல்வாழ்த்துகளும். நன்றி.”
ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதற்காக பாபு சார் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
நானும் இதற்கு முன்பு ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ போன்ற பல படங்களில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறேன். அதுபோல பாபு சாரின் முதல் படத்திலேயே அவருடன் இணைந்து வேலை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஜெய் சாருடன் பல ஆக்ஷன் காட்சிகளில் பணியாற்றியிருக்கிறோம். அந்த நேரங்களில் அவர் மிகுந்த ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார்.
இந்தப் படத்தில் எனக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பை இயக்குநர் வழங்கியுள்ளார். அதற்காக அவர் எடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது.
வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. அதுபோல இந்தப் படம் இதில் பணியாற்றிய பலரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
ரிச்சர்டுடன் எனக்கு நீண்டநாள் நட்பு உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குறிப்பாக இசையமைப்பாளருக்கு நான் தனியாக நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் அதிகமாக பேசும் பாடல்களாக இவை இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”
எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். எங்களுடைய இந்தப் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தால், அதன் அடித்தளமாக இருந்தது ‘பாஃப்டா’ தான். அங்குதான் ஜெய் சாரையும், பாபுவையும் முதன்முதலாக சந்தித்தோம். அங்கிருந்து தொடங்கிய இந்தப் பயணம் இன்று ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பயணத்தின் பலனாக இந்த முதல் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை என்னை நம்பி ஒப்படைத்த பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர் மிகவும் நல்ல இயக்குநர். பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அனைத்து பொது விடுமுறைகளிலும் எங்களுக்கு ஓய்வு கொடுப்பார். மாலை ஆறு மணிக்குள் அலுவலக வேலையையும் முடித்துவிடுவார். இப்படிப்பட்ட அமைதியான மற்றும் அன்பான குழுவுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்த அனுபவமாக இருந்தது.
ஜெய் சாருடன் இதற்கு முன் ‘பலூன்’ படத்தில் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதன் பிறகு என் முதல் படத்திலேயே அவருடன் மீண்டும் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக தோன்றுகிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
அதேபோல் தனஞ்செயன் சார், சசி சார், மீனாட்சி மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்.
இங்கே இருக்கும் அனைத்து மாஸ்டர்களுக்கும் என் மரியாதை. இங்கு வந்திருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
என் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று பேருக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலில் எடிட்டர் லலின் சார் — அவர் தான் என்னுடைய முதல் குரு. அடுத்து எடிட்டர் ரூபன் சார் — அவரிடம் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றினேன். மூன்றாவதாக இயக்குநர் அட்லி சார். இந்த மூவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணமான முக்கியமான மனிதர்கள் இவர்கள்தான்.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”
CFO சத்யநாராயணன் பேசியதாவது:
அனைவருக்கும் மாலை வணக்கம். இயக்குநர் பாபு விஜய் மற்றும் இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக அனைவரும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இது பாபு விஜய்க்கு ஒரு கனவு திரைப்படமாகும்.
இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளித்து, இதை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். பல மேடைகளில் மைக்கைப் பிடித்து பேசிய அனுபவம் இருந்தாலும், இன்று இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் சசி சாரை நேரில் சந்திப்பதில் மிகுந்த சந்தோஷம். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் ஒவ்வொரு படத்திலும் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அம்சம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. குறிப்பாக விஜய் ஆண்டனி சாருடன் வரும் உங்கள் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
‘கொலை’ படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கூட விஜய் ஆண்டனி சார் உங்களைப் பற்றி நிறையப் பேசுவார். அதனால் இன்று உங்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.
முருகதாஸ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கொடுக்காத தாக்கமே இல்லை. உங்கள் படங்கள் தமிழ்நாட்டையே குலுக்கியிருக்கின்றன. இன்றைய பல மாற்றங்களுக்கும் நீங்கள் விதைத்த விதைகளே காரணம் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிப்பவர்.
ஜெய் ப்ரோவுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். அவருடைய இசை அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு விஷயங்களிலிருந்து இசையின் மிகச் சிறிய விவரங்கள் வரை என்னுடன் விவாதிப்பார். ‘இதை எப்படிச் செய்தீர்கள்?’, ‘இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?’ என்று அருமையான ஆலோசனைகளை வழங்குவார். இந்தப் படத்தில் உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி ப்ரோ. படத்தைப் பார்த்தவுடன் உங்கள் ஸ்கிரீன் பிரசென்ஸ் அனைவருக்கும் புரியும்.
மீனாட்சி இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதேபோல் ரிச்சர்டின் வேலை எனக்கு முதல் படத்திலிருந்தே மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு ஃபுட்டேஜ் பார்க்கும்போதுதான் தெரியவந்தது. யாரும் அதைப் பற்றிச் சொல்லவில்லை. அது இந்தப் படத்தின் ஒரு இனிய சர்ப்ரைஸ் கேமியோ என்று நினைக்கிறேன்.
டார்லிங்கையும் ஒரு பொதுநண்பர் மூலமாகத்தான் எனக்குத் தெரியும். மிகவும் திறமையான எழுத்தாளர். இன்னும் நிறையப் படங்களில் நீங்கள் பணியாற்ற வேண்டும் ப்ரோ.
இப்போது இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டும். அவரிடம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவரது வேகமான முடிவெடுக்கும் திறன். அவருடைய பிசினஸ் பின்னணி காரணமாக இருக்கலாம்; எந்த விஷயத்திலும் உடனே தெளிவான முடிவை எடுப்பார். நான் இதுவரை பணியாற்றிய பல இயக்குநர்கள் நீண்ட நேரம் யோசிப்பார்கள். பலரது கருத்துகளால் முடிவுகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் பாபு விஜய் அப்படியில்லை. அவர் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது; அவர் நினைத்தாலும் கூட மாற்ற முடியாது. அந்த அளவுக்கு உறுதியான முடிவெடுப்பவர்.
அது எங்களைப் போன்ற டெக்னீஷியன்களுக்கு வேலை செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. நான் ஒரு டியூன் கொடுத்துவிட்டால், அது சரியானது என்று நம்பினால் மீண்டும் தேவையற்ற விவாதங்கள் இருக்காது. இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்களுக்கெல்லாம் மிகவும் சுலபமாக இருக்கும். அதையும் தாண்டி அவருக்கு மிகச் சிறந்த இசை ரசனை உள்ளது. அவர் ரசித்து மகிழும் இசையை இந்தப் படத்தில் உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு என்னை அணுகினார்.
ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, வெளியீட்டிற்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். அதுவும் முதல் படத்திலேயே அதைச் சாதித்திருக்கிறார். உண்மையில் இது ஒரு இமாலய சாதனை. இந்தப் பயணத்தில் பல சவால்கள் வந்தன. ஒவ்வொரு பிரச்சனையும் வந்தபோதும் அவர் எனக்கு ஃபோன் செய்வார். ‘பிரதர்…’ என்று குரல் சற்று தளர்ந்திருந்தால் ஏதோ பிரச்சனை என்று புரியும். அதே ‘பிரதர்…’ குரலில் உற்சாகம் இருந்தால் நல்ல செய்தி நடக்கிறது என்று அர்த்தம்.
இவ்வளவு சவால்களைத் தாண்டி இந்தப் படம் இன்று வெளியாகும் நிலைக்கு வந்துள்ளது. வரும் மே 15-ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
தொழிலதிபரும், Muthuraman Group of Companies நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினருமான திரு சிவகுமார் பேசியதாவது:
“வணக்கம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மேடையில் பேச வருகிறேன். கடைசியாக பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு சினிமா துறையிலிருந்து முழுமையாக விலகி தொழில் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். தற்போது ஏழு நாடுகளில் எங்களுடைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
எங்களுடைய தொழில் கூட்டாளர்களில் Daimler, BharatBenz, Samsung, Hyundai போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. மொத்தமாக சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். இந்த பத்து ஆண்டுகளில் நான் முழுமையாக தொழில் உலகில் பயணித்தேன். தற்போது புதிதாக 1200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்குக் காரணம் CFO சத்யநாராயணன் தான். ஒரு முக்கியமான தொழில் பணியில் அவர் எனக்கு உதவி செய்தார். நான் கொடுத்த ஒரு பெரிய பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதனால்தான் நேற்று மாலை அவர் கேட்டவுடன் இந்த விழாவிற்கு வரச் சம்மதித்தேன். பொதுவாக நான் இப்படிப்பட்ட சினிமா விழாக்களுக்கும் வருவதில்லை; மேடைகளில் பேசுவதும் இல்லை.
இயக்குநர் விஜய் பாபுவின் அடுத்த படத்திற்கு நான் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் ஒரு நல்ல கதையைச் சொல்லட்டும். எங்களுடைய நிறுவன அளவில் பார்த்தால் அந்த 100 கோடி என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அவர் மீதும் CFO சத்யநாராயணன் மீதும் உள்ள நம்பிக்கையைக்காக அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.
சினேகன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு மூன்று ஆண்டுகள் நாங்கள் நெருக்கமாகப் பழகியிருக்கிறோம். அவர் அதை மறந்திருக்கலாம்; ஆனால் இன்று இந்த மேடையில் அவரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மாதிரியான பொதுவிழா மேடையில் பேசுவது எனக்கு முதல் அனுபவம். கிரிக்கெட் வாரியத்தில் இருந்த காலத்தில் நிறையப் பேசியிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் மேடையேறுவது இதுவே முதல் முறை. அனைவருக்கும் நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:
இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கும், இங்கே இருக்கும் மூன்று பேருக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக முருகதாஸ் சாரைப் பார்க்கும்போது அது இன்னும் பெருமையாக இருக்கிறது.
விஜய் சாரின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மூன்று முக்கியமான படங்கள் — ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’. இந்த மூன்று படங்களும் விஜய் சாருக்கு எவ்வளவு பெரிய வெற்றி கொடுத்ததோ, அதேபோல் முருகதாஸ் சாரின் பயணத்தையும் மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தியது.
‘சர்கார்’ படத்தில் நீங்கள் காட்டிய அரசியல் விழிப்புணர்வு அசாதாரணம். ஒரு ஓட்டின் சக்தியை அந்த அளவுக்கு சொல்லி வைத்தது ஒரு முன்னோக்கிய பார்வை போல இருந்தது. ஏதோ ஒரு மாற்றம் வரப்போகிறது என்பதை நீங்கள் அப்போதே உணர்த்திவிட்டீர்கள்.
‘கத்தி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சனையை எடுத்துச் சென்ற விதம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அந்தப் படத்தில் விஜய் சார் கொடுத்த நடிப்பு குறித்து நான் அவரிடம் நேரிலேயே பாராட்டி இருந்தேன். கமர்ஷியல் படங்களில் இருந்த அவர், முதல் முறையாக அந்த அளவுக்கு எமோஷனலான மற்றும் அழகான நடிப்பைக் கொடுத்திருந்தார். அவர் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்.
ஜெய் உண்மையிலேயே அன்பான தம்பி மாதிரி. தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் சாருக்காகச் சென்று பிரச்சாரம் செய்தது சாதாரண விஷயமல்ல. சினிமா துறையில் இருந்து ஒருவராகத் திறந்தவெளியில் அரசியல் ஆதரவு கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ‘என் அண்ணன் ஜெயிப்பார்’ என்ற நம்பிக்கையுடன் அவர் சென்றார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள், ரீல்ஸ் வெளியிட்டார். இன்று அந்த நம்பிக்கை உண்மையாகி, விஜய் சார் முதல்வராகியிருக்கிறார். அது நமக்கு மட்டுமல்ல, முழு சினிமா துறைக்கும் பெருமை.
அவர் தமிழ்நாட்டுக்கும், சினிமா துறைக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. ஜெய் ஆரம்பத்தில் விஜய் சாருக்குத் தம்பியாக நடித்தவர். இன்று இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தால், சின்ன தளபதி மாதிரி ஒரு தனி மேனரிசத்துடன் காமெடியும் நடிப்பும் கலந்த ஒரு தனித்துவம் இருக்கிறது.
இனிமேல் திரையில் விஜய் சாரைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் திறன் ஜெய்க்கு இருக்கிறது. நல்ல கதைகள் கிடைத்தால், உங்கள் அண்ணனைப் போல நீங்களும் பெரிய உயரத்திற்குப் போக முடியும்.
பாபு விஜய் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படியிருக்கும்போது, BOFTA திரைப்படக் கல்லூரியின் முதல் பேட்ச்சில் மாணவனாகச் சேர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு ஒரே குறிக்கோள் — விஜய் சாரோடு ஒரு படம் செய்ய வேண்டும்’ என்று அப்போதே சொன்னார்.
முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் முருகதாஸ் சாரிடம் பேசினேன். அவர் வாய்ப்புக் கொடுத்தார். ‘சர்கார்’ படத்தில் அவர் அசோசியேட்டாக வேலை செய்தார். அப்போது அவர் என்னிடம், ‘சார், என் கனவு நனவாயிடுச்சு. முருகதாஸ் சாரோட சேர்ந்து விஜய் சாரோட படத்தில் வேலை பண்ணிட்டேன்’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
அதற்குப் பிறகு அவருடைய கனவு, தானே ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான். அதுதான் இன்று ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படமாக உருவெடுத்துள்ளது.
அவருடைய குடும்பமும் நண்பர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தப் படத்தைப் பெரிய அளவில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் BOFTA-வின் முதல் பேட்ச் மாணவர் ஒருவர் எடிட்டராகவும், பாபு விஜய் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்கள். அவருடைய குருவாக இருந்த முருகதாஸ் சார் இந்த விழாவில் இருப்பதும், BOFTA-வில் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த சசிகுமார் சார் இங்கே இருப்பதும் எங்களுக்குப் பெருமை.
முதல் படம் என்பதால் ஒரு சின்ன, எதார்த்தமான படமாக ஆரம்பிக்கலாம் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர், ‘நான் கமர்ஷியல் இயக்குநரிடம் இருந்து வந்தவன். எனது முதல் படம் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும்’ என்றார். அதற்கேற்ற மாதிரி இந்தப் படம் உருவாகியுள்ளது.
முருகதாஸ் சார் படங்களில் இருப்பது போலவே இதில் என்டர்டெயின்மென்ட்டும் இருக்கும்; அதே நேரத்தில் சமூகப் பொறுப்புள்ள ஒரு கருத்தும் இருக்கும். பாபு விஜய் தனது முழு முயற்சியையும் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.
இறுதியாக, இந்தப் படம் அனைவரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்கள் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும். இன்று தளபதி விஜய் மிகப்பெரிய சாதனையைச் செய்து தமிழ்நாட்டின் முதல்வராக உயர்ந்திருக்கிறார். அவருடன் தொடர்புடைய பலர் இணைந்து உருவாக்கிய இந்தப் படைப்பும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
நடிகர் கதிர் பேசியதாவது:
‘சட்டென்று மாறுது வானிலை’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். எனக்கு எப்போதுமே விஜய் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதனால் அவருடன் நேரடியாக நடிக்க முடியாத ஒரு குறை இருந்தது. ஆனால் ஜெய் சாருடன் இந்தப் படத்தில் நடித்தபோது, விஜய் சாருடன் நடித்த உணர்வே கிடைத்தது. படம் முழுவதும் அவர் அந்த மாதிரியான ஒரு ஆற்றலோடு நடித்திருக்கிறார்.
அதிலும் முக்கியமாக, படம் சரியாக முடிந்து, ரிலீஸ் ஆகும் நிலைக்கு வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒரு படத்தில் நடித்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமென்றால் படம் வெளியாவதே முக்கியம். அந்த விஷயத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். அதற்காக மிகவும் மகிழ்ச்சி.
மீனாட்சி மேம் உடன் நடித்ததும் ஒரு நல்ல அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், அதே நேரத்தில் மிகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறீர்கள். முருகதாஸ் சார் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேபோல் போஸ் வெங்கட் சார், தனஞ்செயன் சார், ரிச்சர்ட் அண்ணா, சினேகன் சார் மற்றும் இங்கே இருக்கும் அனைவருடனும் இந்த விழாவில் இருப்பது மகிழ்ச்சி.
ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழுங்கள், நல்ல முறையில் எழுதுங்கள். இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவது முழுமையான பொழுதுபோக்கை எதிர்பார்த்துதான். அந்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. அதனால் அனைவரும் இந்தப் படத்துக்கு ஆதரவு தர வேண்டும். நன்றி.”
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது:
இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு இசையமைப்பாளர், கவிதைகளுக்கும் வரிகளுக்கும் உண்மையான ரசிகராக இருப்பது ஒரு பாடலாசிரியருக்கு மிகப்பெரிய சந்தோஷம். சாதாரணமாக ஒரு மெட்டு கிடைத்தாலே போதும், அதற்குள் வரிகளைப் பொருத்திவிடலாம் என்ற மனநிலை பல இடங்களில் இருக்கும். ஆனால் வரிகளை ரசித்து, படைப்பாளிகளையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் இசையமைப்பாளர்கள் மிகவும் அரிது.
அந்த வரிசையில் இன்று மிக அழகாக வளர்ந்து கொண்டிருப்பவர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். தமிழ் வரிகளையும் கவிதைகளையும் அவர் ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒன்று ‘சட்டென்று மாறுது வானிலை’, இன்னொன்று ‘உயிரே’. அந்த இரண்டு பாடல்களையும் நாங்கள் சேர்ந்து உருவாக்கினோம்.
மீதமுள்ள ஒரு பாடலை வேறு குழுவாகச் சேர்ந்து எழுதியிருந்தார்கள். அப்போது கூட நாங்கள் சிரித்துக்கொண்டே, ‘அந்த ஒரு பாடலையாவது எங்களுக்குக் கொடுங்கள்’ என்று சொன்னோம். ஆனால் அவர்கள், ‘இது நாங்கள் கூட்டமாகச் சேர்ந்து எழுதிக்கொண்டிருக்கிற பாடல்; இதற்குள் நீங்கள் வராதீர்கள்’ என்று நகைச்சுவையாகச் சொன்னார்கள். அந்த முழு அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பாபு விஜய் சாரைப் பார்க்கும்போது என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அவரது எளிமை. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஒரு பக்கம் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் கலை உலகத்தில் முழுமையாக இறங்குவது மிகவும் கடினம். பொதுவாக ஒருவருக்குக் கணக்குப் பார்ப்பதிலோ அல்லது கலையை ரசிப்பதிலோ தான் முழு கவனம் இருக்கும். ஆனால் இந்த இரண்டு உலகங்களையும் சமநிலையுடன் கையாண்டு, இப்படத்தை ஒரு அழகான படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.
இந்த மேடையில் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு ஊடக நண்பர்களையும், பல பழைய நண்பர்களையும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதே ஒரு திருவிழா போல ஆகிவிட்டது. எல்லாமே பிரிந்து போயிருக்கும் இந்த காலத்தில், முகத்தைப் பார்த்துப் பேசும் ஒரு அருமையான வாய்ப்பைப் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் சசி சார் மற்றும் முருகதாஸ் சார் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் நேரடியாக வேலை செய்யவில்லை என்றாலும், அவர்களுடைய ரசிகனாக நான் எப்போதும் ஒரு மூலையில் இருப்பேன்.
ஜெய் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்க்கும்போதெல்லாம் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தையைப் போலவே தோன்றுவார். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும், எவ்வளவு அனுபவம் இருந்தாலும், அவரிடம் ஒரு குழந்தைத்தனமான குணம் இருக்கும். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. குறிப்பாக நான் எழுதிய பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் மிகவும் பெரிய விஷயம். இன்றைய காலகட்டத்தில் பாடல்கள் சின்னச் சின்னப் பகுதிகளாக வெட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முழுமையான நீளமான பாடல்களும், நல்ல தமிழ்ச் சொற்களும் கொண்ட பாடல்கள் வருவது அரிது.
அந்த வகையில் இந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களாக அமையும் என்று நம்புகிறேன். அந்த வாய்ப்பை அளித்த இசையமைப்பாளருக்











