எனது வீட்டில் தேசிய விருது இருக்கிறது… ஆனால் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற வழியில்லை!” திரைப்பட பின்னணிப் பாடகர் சுந்தரையர் !
எனது வீட்டில் தேசிய விருது இருக்கிறது… ஆனால் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற வழியில்லை!” திரைப்பட பின்னணிப் பாடகர் சுந்தரையர் !
சென்னை 28 அக்டோபர் 2027 தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரையர், வீதி நாடகங்கள், அரசு கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வுப் பணிகள் எனப் பல்வேறு தளங்களில் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.
கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்… முதல் பாடலுக்கே தேசிய விருது வென்றவர்… இன்று குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்!
தமிழ்த் திரையுலகில் ஒரு பாடலின் மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற பாடகர் சுந்தரையர், இன்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் சிக்கித் தவித்து வருகிறார்.
கலைத்துறையில் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பயணித்து வரும் அவர், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அரசுப் பணி வழங்க உதவுமாறு தமிழக அரசிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடலும் நடிப்பும் மட்டுமே தனது வாழ்க்கை என்று நம்பி, பல நேரங்களில் ஊதியத்தைக்கூட எதிர்பார்க்காமல் கலைப்பணியாற்றியவர்.
தேசிய விருது பெற்றுத் தந்த ‘ஜோக்கர்’ திரைப்படப் பாடல்!
2016-ஆம் ஆண்டு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜாஸ்மின்’ பாடலைப் பாடும் வாய்ப்பு சுந்தரையருக்குக் கிடைத்தது.
தனது முதல் திரைப்படப் பாடலிலேயே தேசிய விருதைப் பெற்ற அவர், அந்த அங்கீகாரம் தனது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து பாடுவதற்கான வாய்ப்புகள் குவியும் என்றும் நம்பினார்.
தேசிய விருதுடன் மட்டுமின்றி, ஃபிலிம்பேர், ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இருப்பினும், தேசிய விருது கிடைத்து பத்து ஆண்டுகள் கடந்தும், அவருக்குக் கிடைத்த பாடல் வாய்ப்புகள் மிகக் குறைவு. கிடைத்த வாய்ப்புகளிலும் உரிய ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டு தந்த நம்பிக்கை!
பாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில், நடிப்பின் மூலம் குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றார் சுந்தரையர்.
அந்தப் பயணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பாராட்டிய ரஜினிகாந்த், அவரை அழைத்துப் பேசியது புதிய நம்பிக்கையை அளித்ததாக சுந்தரையர் கூறுகிறார்.
ஆனால், அந்தப் பாராட்டுக்குப் பிறகும் நிலையான வருமானத்தைத் தரக்கூடிய வாய்ப்புகள் அமையவில்லை.
ஒரு கலைஞனாகக் கிடைத்த அங்கீகாரம், குடும்பத்தின் அன்றாடப் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையவில்லை என்பதே அவரது வேதனை.
வீட்டில் தேசிய விருது இருக்கிறது… வாழ்க்கையில் வறுமையும் இருக்கிறது!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் சென்னைக்கு வந்த சுந்தரையர், இன்று வாடகை செலுத்துவதற்கும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் போராடி வருகிறார்.
“என் வீட்டில் தேசிய விருது இருக்கிறது.
ஆனால் என் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற என்னிடம் எதுவும் இல்லை.
ஒரு தந்தையாக அவர்களுக்குத் தேவையானவற்றைக்கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
உப்பு போட்ட ரேஷன் அரிசியுடன் நாட்களைக் கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று தனது குடும்பத்தின் துயரத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் தனது குரலால் ரசிகர்களை மகிழ்வித்த கலைஞர், இன்று தனது குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பது வேதனைக்குரிய முரண்பாடாக உள்ளது.
கல்வித் தகுதியும் தேசிய விருதும் இருந்தும் கிடைக்காத அரசுப் பணி!
சுந்தரையர் இசைக் கல்லூரியில் மூன்றாண்டு ‘இசைக் கலைமணி’ பட்டயப் படிப்பையும், இசை ஆசிரியர் பயிற்சியையும் முடித்துள்ளார்.
இசைத்துறையில் கல்வித் தகுதியும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதும் பெற்றிருப்பதால், அரசு இசை ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரிடம் நேரடியாக மனுக்கள் அளித்தும் பலன் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.
தற்போது மீண்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் தபால் மூலம் மனுக்களை அனுப்பியுள்ளார்.
கலைஞரின் குரல் அரசின் கவனத்துக்குச் செல்லுமா?
விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும், வாழ்வாதாரத்துக்காகப் போராடும் கலைஞர்களின் நிலை குறித்து இந்தச் சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது.
கலைத்துறையில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கிய சுந்தரையர், தற்போது தனக்காக மட்டுமல்லாமல், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் உதவி கோருகிறார்.
“இந்தப் பதிவைப் படிக்கும் அன்புள்ளங்களே, உங்களில் யாருக்காவது தமிழக முதல்வரின் தனிப்பிரிவுடனோ, பள்ளிக்கல்வித் துறை அமைச்சருடனோ நேரடியாகவோ சமூக ஊடகங்கள் வாயிலாகவோ தொடர்பு இருந்தால், தயவுசெய்து எனது நிலைமையையும், அரசுப் பணி தொடர்பான எனது கோரிக்கையையும் அவர்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு கலைஞரின் திறமையை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவரது வாழ்வாதாரத்துக்கும் உரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கையின் அடிப்படை.
தேசிய விருது அவரது திறமைக்குச் சான்று.
ஆனால், அவரது குடும்பத்துக்கு இன்று தேவை வாழ்வாதாரத்துக்கான ஆதரவு.
சுந்தரையரின் கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்குச் சென்று, அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஒரு நல்ல வழி பிறக்குமா?
கலைத்துறையினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்தக் கோரிக்கையை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க உதவுவார்களா?
காலம் பதில் சொல்லட்டும்!
கோரிக்கை விடுக்கும் கலைஞர்:
சுந்தரையர்
நடிகர் |தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர்
முகவரி:
25, சித்திவிநாயகர் சாலை,
சுபம் நகர், பழைய பல்லாவரம்,
சென்னை – 600117.
தொடர்புக்கு: 90926 41426













