கேமராக் ‘கண்’ணன் சார் அவர்கள் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் சு.செந்தில் குமரன்
சம்பிரதாய அஞ்சலியாகக் கடக்க முடியவில்லை . கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது. நெஞ்செங்கும் சோகம்.
காரணம் கண்ணன் சார் என் மீது காட்டிய அன்பு அப்படிப்பட்டது .
நாடோடித் தென்றல் படத்தில் அவரது ஒளிப்பதிவைப் பாராட்டி அறியா வயதில் நான் சொன்ன வார்த்தைகள் அவருக்குப் பிடித்துப் போக , அன்று முதல் எனக்கென்று எப்போதும் தனி அன்பையும் புன்னகையையும் வைத்திருந்தவர் .
பாரதிராஜாவிடம் உதவியாளராக நான் சேருவது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்த அவர் கேப்டன் மகள் சமயத்தில் ” டைரக்டர் கிட்ட ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தர்றேன். போய் கதை சொல்லுங்க” என்றார் நானும் தயாராக இருந்தேன்.
ஒரே வாரத்தில் தகவல் சொன்னார். “போய் சொல்லுங்க. கதை பிடிச்சு இருந்தா அசிஸ்டன்ட் டைரக்டரா சேர்த்தூக்குவார்” என்றார்.
பாரதிராஜா சார் அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் போனேன். மேலே இயக்குனரின் அறைக்கு அழைத்துப் போனவர் சித்ரா லட்சுமணன் . மெல்லிய வெளிச்சம். பாரதிராஜா அப்போது எழுத்தாளர் மகரிஷி எழுதிய நெருப்புக் கோழிகள் நாவலைப் படித்துக் கொண்டு இருந்தார் .
“கண்ணன் சொன்னார் . சொல்லு ” என்றார் .
அது ஒரு கிராமத்துக் கதை. வித்தியாசமான கதை .(இன்றும் அந்த கதை உயிரோடு- உயிர்ப்போடு – இருக்கிறது. ஆனால் நான் அப்போது சொன்ன ட்ரீட்மென்ட் அவ்வளவு சிறப்பானது அல்ல )
சொல்லிக் கொண்டு இருக்கும்போது , மீண்டும் உள்ளே நுழைந்த சித்ரா லட்சுமணன் செக் ஒன்றில் பாரதிராஜாவின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டுப் போனார். அவ்வளவு நேரம் கதை தொடரும் என்று அவர் நினைக்கவில்லை போலும். அடுத்தடுத்து இயக்குனருக்கு சந்திப்புகள் இருந்திருக்கும் போல.
நான் தொடர்ந்து சொல்லி முடித்தேன்.ரசித்துக் கேட்டார் பாரதிராஜா. அதில் சிம்பாலிக் ஷாட் மூலம் ஒரு உத்தி வைத்து இருந்தேன். அதை இதுவரை யாரும் எந்த கதையிலும் செய்யவில்லை. அதை மிகவும் பாராட்டினார் . அதன் பின்னர் எந்தப் படத்திலும் அவர் அந்த உத்தியை கடை பிடிக்கவில்லை என்பதில் இருந்தே இயக்குனரின் நேர்மையை புரிந்து கொள்ளலாம் .
ஒரு இடத்தில் கிழக்கே போகும் ரயிலில் நாயகியின் நிர்வாண ஊர்வலத்தை மனதில் வைத்து ஒரு காட்சி (அதே போன்ற காட்சி அல்ல) சொன்னேன் . அதற்கு மட்டும் என்ன இப்படி முட்டாள்தனமா கேரக்டர் அசாசினேஷன் பண்ற ? ” என்றார் .
சந்தோஷமாக இருந்தது .
“உனக்குள்ள டைரக்ஷன் இருக்கு . சீக்கிரமே ஒர்க் பண்ணலாம். எவனும் வெளிய போக மாட்டேங்கறான் . வி வில் வொர்க் . நான் கண்ணன் கிட்ட இன்பார்ம் பண்றேன் ” என்ற போது திரும்பிப் பார்த்தேன் . சித்ரா லட்சுமணன் இருந்தார் .
உற்சாகமாக கை குலுக்கி அனுப்பி வைத்தார் சித்ரா லட்சுமணன் .
அடுத்த சில நாளில் கண்ணனை சந்திததபோது ,”அவன் நல்ல ஃபீலர். கூப்பிட்டுக்கலாம்னு டைரக்டர் சொல்லி இருக்காரு. சீக்கிரமே நான் சொல்றேன் . டீம் உள்ள வந்திடுங்க ” என்றார் கண்ணன் உற்சாகமாக.
நானும் காத்திருந்தேன். அழைப்பு வரவில்லை . ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு கண்ணனை சந்தித்தபோது, “எல்லாம் சரியா இருந்தது. உங்களை வரச் சொல்ல முடிவும் பண்ணிட்டாரு . அந்த நேரம் கடலோரக் கவிதைகள் ராஜா , அவர் பிரதரை சேர்த்துக்கச் சொல்லி ரொம்ப கம்பெல் பண்ணாரு. அதான் நீங்க உள்ள வர முடியல ” என்றார் நிஜமான வருத்தத்தோடு .
அதன் பின்னர் என் மேல் இன்னும் அன்பாக இருந்தார் . நானும் இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்களிடம் பணியாற்றினேன்
ஒரு முறை தன் தந்தையும் காவிய இயக்குனருமான பீம்சிங்கின் நினைவு நாளன்று அவர் வீட்டுக்கு வரச் சொன்னார் போய் பீம்சின் போட்டோவுக்கு அஞ்சலி செலுத்தியபோது அவ்வளவு நிறைவாக இருந்தது . அங்கே என்னை பார்த்த லெனின் சார் தம்பி கண்ணன் உங்களுக்கு அவ்வளவு நெருக்கமா என்று சந்தோஷப்பட்டார்
இரண்டு முறை என்னை குன்றத்தூர் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார் என்ற வார்த்தை ஒன்றே போதும், அவருக்கு நெருக்கமானவர்கள் என் மீது அவர் காட்டிய அன்பைப் புரிந்து கொள்ள!
அண்ணாதுரை படத்தின் மூலம் நடிகன் ஆகி பெயர் பெற்ற பிறகு அவரை சந்தித்தபோது , அவருக்கு ரொம்ப சந்தோசம். ”என்னால நடக்காம போன அந்த குற்ற உணர்ச்சி இப்போதான் போகுது ” என்றார் . நெகிழ்ந்து போனேன் . இவ்வளவு நல்ல மனிதனா என்று ஆடிப் போனேன் . ”டைரக்ஷனை விட்றாதீங்க. டைரக்டர் உங்களை பாராட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு “என்றார்.
திமிரு புடிச்சவன் படம் பார்த்து விட்டு என் நடிப்பை ரொம்பப் பாராட்டினார் . அண்மையில் ஒரு முறை சந்தித்தபோது, “பத்திரிக்கையாளர் டூ உதவி இயக்குனர் டூ நடிகர்னு எங்க போஃப்டா இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸ்க்கு வந்து ஒரு கிளாஸ் எடுங்க ” .என்று ஒரு முறை சொன்னார் . சம்மதித்தேன்.
ஆனால் கொரோனா காரணமாக அது தள்ளிப் போய் விட்டது.
ஒவ்வொரு முறை சந்திக்கும்போது ” நீங்க நடிக்கிற அல்லது டைரக்ட் பண்ற ஒரு படத்தை நாம பண்ணுவோம்” என்பார் அக்கறையாக. நானும்” கண்டிப்பா சார்” என்று சொல்வேன்.
இனி அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் ஆகப் பெரும் சோகம் . கண்டிப்பா என்ற அந்த வார்த்தை இப்போது கண்ணீரில்.
என்று காயா ஈர அஞ்சலிகள் கண்ணன் சார்!











