நடிகை சுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு.

கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழகஅரசு விளம்பரப் படங்களை தயாரித்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறது.

அதில் சில முக்கிய விளம்பரங்களை இயக்கிவரும் கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அதுபற்றி கூறியதாவது.

‘காவல் அரணாக செயல்பட்டு கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும்
களவீரர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி சுஹாசினி அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப்படம் இப்போது மக்களிடம் பரவலாக சென்றடைந்து வருகிறது.

கமல்ஹாசன், மணிரத்னம் போன்ற இருபெரும் ஆளுமைகள் மத்தியில் வளர்ந்து,வாழ்ந்து செயல்பட்டு வரும் சுஹாசினி அவர்கள் இந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது முழுமையாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். பெரிய திரைப்படமோ, சிறிய விளம்பரப்படமோ இரண்டுக்குமே சமமான அர்ப்பணிப்பை கொடுக்க வேண்டுமென்ற சுஹாசினி அவர்களின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. அரசின் உயர்நிலை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் சில திரைப்பட ஹீரோக்கள், ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்களையும் வைத்து சில விளம்பரப் படங்களை நான் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செழியன் குமாரசாமி அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில் இந்த படைப்புகள் மிகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குனரும் ஹீரோவுமான
இ.வி.கணேஷ்பாபு கூறினார்