‘கதைகளின் நிலம்’ – பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்.
சென்னை 27 பிப்ரவரி 2022
‘கதைகளின் நிலம்’ – பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்.
திருமதி கனிமொழி கருணாநிதி, டாக்டர் பி. சந்திர மோகன் ஐஏஎஸ், கான்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் (கான்சுலேட் ஜெனரல், ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி, சென்னை) ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
இந்தக் கலை நிகழ்வு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நமது வருங்காலக் குடிமக்களின் பார்வையில் வெளிப்படுத்துகிறது.
26 பிப்ரவரி 2022, சென்னை: கோதே-இன்ஸ்டிட்யூட் / மேக்ஸ் முல்லர் பவன் (சென்னை), சென்னை போட்டோ பயன்னலே (CPB – சிபிபி) அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த ‘கதைகளின் நிலம்’ (A Land of Stories) என்னும் தலைப்புக் கொண்ட புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி பிப்ரவரி 26, 2022 அன்று அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கிவைத்தார்.
சென்னை கோதே இன்ஸ்டிட்யூட்/ மேக்ஸ் முல்லர் பவன், சென்னை புகைப்பட பயன்னலே அறக்கட்டளை ஆகியவை கூட்டாக நடத்தும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில் டாக்டர் பி. சந்திர மோகன் ஐஏஎஸ் (அரசு சுற்றுலா கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர், TTDC), சுற்றுலா இயக்குநர் மற்றும் கன்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் (கான்சலேட் ஜெனரல், ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி, சென்னை), ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவர்களின் படைப்புகளை இந்தக் கண் காட்சி காட்சிப்படுத்துகிறது. ஐபோன்களில் படம் எடுப்பது குறித்துச் சிபிபி ப்ரிசம் (CPB Prism) குழந்தைகளுக்கு வழிகாட்டியது.
குழந்தைகள் நிலத்தையும் வீட்டையும் தங்கள் படைப்புக்கான வெளியாக ஆக்கித் தொலைபேசிக் கருவிகளில் பல தருணங்களை அழகாகப் படம்பிடித்தனர்.
இந்தக் கலைத் திட்டம், மாணவர்கள் நமது மாநிலமான தமிழ்நாட்டின் நல்ல அம்சங்களை ஆராய்வதையும் அதன் செழுமையைத் தங்கள் புகைப்படங்கள் மூலம் பிரதிபலிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. புகைப்படங்கள் எந்தத் தருணத்தையும் காலத்தில் உறைய வைக்கும் திறன் கொண்டவை. இந்த மாணவர்கள் பல்வேறு விதமான மனிதர்கள், கட்டிடங்கள், பசுமையான நிலப்பரப்புகள், கலாச்சாரத்தின் தடங்கள் ஆகியவற்றை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். தங்கள் புகைப்படங்கள் மூலம் தமிழகத்தின் பாரம்பரியத்தை ஆராயும் வாய்ப்பையும் பெற்றார்கள்.
இந்தப் படங்கள் மாநிலத்தின் இயற்கையானதும் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுமான பாரம்பரியத்தை அதன் பல்வேறு பரிமாணங்களுடன் காட்டுகின்றன.
மாணவர்களின் வடிகட்டப்படாத இந்தப் பார்வைகள் தமிழ்நாட்டின் முடிவற்ற கதைகளைக் கூறுகின்றன.
இந்தப் படங்கள் மனதை ஈர்க்கும் கதையாடலையும் முன்வைக்கின்றன.
இளம் கலைஞர்கள் சிலர் கண்காட்சிக்கு வந்திருந்து ஆர்வமுள்ள பார்வையாளர்களிடம் தங்கள் படைப்புகளைப் பற்றி விளக்கினார்கள்.
“பொது முடக்கத்திற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களைப் புதிய கண்களால் படைப்பூகத்துடன் மறுகண்டுபிடிப்பு செய்ய உதவ வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
சிபிபி ப்ரிசம் (CPB PRISM) நடத்திய ஊக்கமளிக்கும் கல்விப் பயிலரங்கங்களின் காரணமாக மாணவர்களால் தமிழ்நாட்டின் அழகை அதன் எல்லா விதமான வேறுபாடுகளுடனும் படம்பிடிக்க முடிந்தது. மாணவர்களால் உருவாக்கப்பட்ட அற்புதமான படைப்புகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
இந்தப் புகைப்படங்கள் சித்தரிக்கும் அனைத்து இடங்களையும் ஆராயும் விருப்பத்தை இவை எனக்குள் ஏற்படுத்தின” என்று சென்னை கோதே இன்ஸ்டிட்யூட் / மேக்ஸ் முல்லர் பவன் இயக்குனர் டாக்டர் கேதரினா கார்ஜென் (Dr.Katharina Görgen) கூறினார்.
“பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுப்பதைப் பல்வேறு வழிமுறைகள் மூலம் நாங்கள் ஊக்குவித்துவருகிறோம்.
புதிய உதவிக் குறிப்புகளைத் தந்து, புதிய நுட்பங்களைக் கற்றுத்தருவதன் மூலம் வளரும் புகைப்படக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். எங்கள் பயிற்சிக்குப் பிறகு, வெளிச்சம், வெளிப்பாடு, வடிவமைப்பு ஆகியவற்றுடன் புகைப்படக் கலையின் பிற கூறுகளையும் மனதில் கொண்டு, நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட புகைப்படங்களை எடுக்கும் திறனில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எங்கள் திட்டங்கள் அனைத்தும் தொடர்பையும் தொடர்பு வலைப்பின்னலையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றின்போது, மாணவர்களின் மன ஆரோக்கியத்திற்கு உதவுவதற்கான ஒரு வழியாகப் புகைப்படம் எடுப்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்” என்று சிபிபி அறக்கட்டளையின் மாணவர் வழிகாட்டியான ஹபீபா பேகம் கூறினார்.
மாணவர் கண்காட்சி அரசு அருங்காட்சியகம், 406, பாந்தியன் சாலை, சென்னை-600 008இல் காலை 9.30முதல் மாலை 5.00 மணிவரை (வெள்ளிக்கிழமைகள், அரசு விடுமுறை நாட்கள் தவிர) பிப்ரவரி 26முதல் ஏப்ரல் 17, 2022வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். எல்லா நேரங்களிலும் கோவிட்-19 தொடர்பான விதிமுறைகளையும், அரசு அருங்காட்சியகமும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும் முன்வைக்கும் விதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
பத்திரிகைக்கான படங்கள்: கலைஞர்களின் படைப்புகள் சில
கண்காட்சியின் கரு: கதைகளின் நிலம் – இது தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கான புகைப்படத் திட்டம். பலதரப்பட்ட மக்கள், இணையற்ற பாரம்பரியம், பசுமையான நிலப்பரப்புகள் ஆகியவற்றைக் கொண்ட தமிழ்நாடு, வளமான கதைகளின் நிலம். சென்னையிலும் மாநிலத்தின் இதர பகுதிகளிலும் உள்ள இளம் கலைஞர்களை அவர்களின் லென்ஸ்கள் மூலம் தங்கள் சொந்த ஊரைச் சித்தரிக்குமாறு அழைப்பு விடுத்தோம். ஐபோன்களைப் பயன்படுத்திப் புகைப்படம் எடுப்பதற்கான வழிகாட்டுதலைப் பெற்ற மாணவர்கள், நிலப்பரப்பையே தங்கள் படைப்புக்கான வெளியாகக் கொண்டு உயிர்ப்புள்ள வண்ணங்கள், அரூபமான வடிவங்கள், கண்ணைக் கவரும் நிழல்கள் அழுத்தமான சித்திரங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்துப் புகைப்படம் எடுத்தார்கள்.
சிபிபி ப்ரிசம் (CPB Prism) பற்றி
சிபிபி அறக்கட்டளை புகைப்படத்தைப் பயிற்சியாகவும் கலை வடிவமாகவும் கொண்டாடி முன்னிறுத்துகிறது. புதியனவற்றை அறியும் ஆர்வம், சிந்தனை, சுய வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்ட சமூகத்தை வளர்த்தெடுப்பது எங்கள் குறிக்கோள்.
சிபிபி ப்ரிசம் (CPB Prism) என்பது சென்னை ஃபோட்டோ பயன்னலே அறக்கட்டளையின் கல்விப் பிரிவாகும். இது குழந்தைகளுக்கான லென்ஸ் அடிப்படையிலான கலைக் கல்வியை அளிக்கிறது.
படைப்பாற்றலின் வெளிப்பாடு, ஆவணப்படுத்தல் ஆகியவற்றுக்காகக் கலைகளைப் பயன்படுத்தவும், முக்கியமான பிரச்சினைகளை ஆராயவும் விமர்சன ரீதியான சிந்தனையைத் தூண்டவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் மாணவர்களுக்கு ஆற்றலை அளிக்கிறோம்.
இணையதளம்: https://chennaiphotobiennale.foundation/prism
இன்ஸ்டாகிராம்: @cpbprism Facebook: @cpbprism
சென்னை கோதே இன்ஸ்டிட்யூட் / மேக்ஸ் முல்லர் பவன் பற்றி
கோதே இன்ஸ்டிட்யூட் ஜெர்மனியின் ஃபெடரல் குடியரசின் கலாச்சார நிறுவனம். இது உலகளாவிய தளத்தில் செயல்படுகிறது.
நாங்கள் வெளிநாடுகளில் ஜெர்மன் மொழி அறிவைப் பரப்புவதுடன் சர்வதேசக் கலாச்சார ஒத்துழைப்பையும் வளர்த்தெடுக்கிறோம். ஜெர்மனியின் கலாச்சார, சமூக, அரசியல் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் ஜெர்மனியைப் பற்றிய விரிவான சித்திரத்தை முன்வைக்கிறோம். எமது கலாச்சார, கல்வித் திட்டங்கள் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதுடன் கலாச்சார ரீதியான ஈடுபாட்டையும் சாத்தியமாக்குகின்றன. 2016இல் சென்னை புகைப்பட பயன்னலே என்னும் கருத்தாக்கம் தொடங்கியது முதல் சென்னை கோதே இன்ஸ்டிட்யூட்டும் சிபிபி அறக்கட்டளையும் இணைந்து பணியாற்றிவருகின்றன.
ஃபேஸ்புக்:gi.chennai | Instagram: gi.chennai | இணையதளம்: goethe.de/chennai











