கடவுளைக் காணக் கோயிலுக்குச் சென்ற காலம் மாறி… அம்மனைக் கொண்டாடத் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள்! நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ நிகழ்த்திய ஆச்சரியம்!
கடவுளைக் காணக் கோயிலுக்குச் சென்ற காலம் மாறி… அம்மனைக் கொண்டாடத் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள்! நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ நிகழ்த்திய ஆச்சரியம்!
சென்னை 08 நவம்பர் 2026 தமிழ் ரசிகர்களுக்கு திரைப்படங்களை எப்பொழுதுமே கொண்டாடுவதில் தனி அடையாளம் உண்டு.
ஆனால், பக்தியையும் சினிமாவையும் ஒன்றாக இணைக்கும் ஒரு திரைப்படம் வெளியாகும்போது அந்தக் கொண்டாட்டத்தின் உற்சாகம் இன்னும் அதிகமாகிறது.
அதற்கு சமீபத்திய உதாரணமாக அமைந்திருக்கிறது நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்கில் வெளியானது.
தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ஆம் தேதி அன்று திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை காண அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டனர்.
திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு முதல் நாள் கொண்டாட்டமாக மாறிய நிலையில், நடிகை நயன்தாராவின் பிரம்மாண்ட கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
வழக்கமாக தமிழில் உள்ள முன்னணி நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு நடைபெறும் இத்தகைய கொண்டாட்டம், இந்த முறை அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற முதல் நாள் காட்சியைத் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி மற்றும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படம் எதுபார்த்தனர்.
திரையில் நடிகை நயன்தாரா அம்மனாக விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகளின்போது சில பெண் ரசிகைகள் உணர்ச்சிவசப்பட்டு திரையரங்கிற்குள்ளேயே சாமியாடியதாக தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களின் இந்த உணர்ச்சிபூர்வமான வரவேற்பு திரைப்படத்தின் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு தனித்துவத்தைச் சேர்த்தது.
திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் 90களில் வெளியான அம்மன் திரைப்படங்களின் நினைவுகளை இந்த படம் மீண்டும் ஏற்படுத்துவதாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவின் கம்பீரமான தோற்றம், நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் வில்லத்தனமான நடிப்பு, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை, பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதே நேரத்தில், திரைப்படத்தின் சில அம்சங்கள் குறித்து மாறுபட்ட விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன.
நடிகை நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, சினேகா, குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்திருப்பதும் திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு வலு சேர்த்துள்ளது.
பக்தி, ஃபேண்டஸி, நகைச்சுவை, பிரம்மாண்டம் எனப் பல அம்சங்களைக் கலந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அமைந்துள்ளது.
ஒரு திரைப்படத்தின் வெற்றியை வசூல் கணக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை; அது ரசிகர்களிடம் ஏற்படுத்தும் உணர்வும் முக்கியமானது.
அந்த வகையில், நடிகை நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியீட்டு நாளில் அரங்கேறிய கொண்டாட்டங்கள், அம்மன் கதாபாத்திரத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பையும் சினிமா மீதான அவர்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றன.












