நடிகர் நிவின் பாலியின் 50-ஆவது திரைப்படம் அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய பட டைட்டில் வெளியானது !

நடிகர் நிவின் பாலியின் 50-ஆவது திரைப்படம் அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய பட டைட்டில் வெளியானது !

சென்னை 29 ஜூன் 2026 திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது.

நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக ‘விஜயம்’ உருவாகிறது. இதன் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ரேசிங்-ஐ பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கு அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்கிறார்.

பாலி ஜூனியர் பிக்சர்ஸ் (Pauly Jr. Pictures) நிறுவனத்துடன் இணைந்து சினிஹோலிக்ஸ் (Cineholics) பேனரின் கீழ் டன்சன் டோனி மற்றும் சுனில் ராமடி ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். வடிவமைப்பு மற்றும் நிர்வாக தயாரிப்பு பணிகளை குட்டு சிவானந்தன் மேற்கொள்கிறார்.

‘துரந்தர்’, ‘துரந்தர் 2’ மற்றும் ஆர்யன் கான் இயக்கிய ‘பார்ட்ஸ் ஆஃப் பாலிவுட்’ (Bards of Bollywood) ஆகிய படைப்புகளுக்கு இசையமைத்த கேரளாவைச் சேர்ந்த ஸ்டீவ் கோட்டூர் இத்திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்.

நெட்டிசன்களின் பேராதரவைப் பெற்று வரும் இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோ, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனை கிண்டல் செய்யும் நகைச்சுவையான காட்சியுடன் தொடங்கி, பின்னர் அல்போன்ஸ் மற்றும் நிவின் இருவரின் திரைப்பயணத்தை சுவாரசியமாக விவரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

திரையுலகில் கொண்டாட்டங்களை உருவாக்கிய இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாலும், இது நிவின் பாலியின் 50-ஆவது படம் என்பதாலும், ‘விஜயம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வானளவுக்கு உயர்ந்துள்ளது. படத்தின் பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

error: Content is protected !!