கெளதம் வாசுதேவ் மேனனின் காந்தக் குரலில் ஆன்மாவைத் தொடும் ‘உயிரே வா’ பாடல்

மறத்தலும் மன்னித்தலுமே உறவுகளின் உன்னதம் என்றால் மிகையாகாது. குறிப்பாக காதலர்களுக்கிடையே உள்ள ஆத்மார்ந்தமான உறவுக்கு இது அப்படியே பொருந்தும்.

வருண், சம்யுக்தா வர்மா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘பப்பி’ படத்தில் இடம் பெற்ற ‘உயிரே வா…’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை சினிமா ரசிகர்களிடம் பெற்று வருகிறது. காரணம், இதயத்தைத் வருடும் இதமான குரலில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இப்பாடலைப் பாடியிருப்பதுதான். கெளதம் வாசுதேவ் மேனன் கருத்தாக்கத்தில் உருவான இந்த வீடியோ பாடலுக்கு அவரே திரையில் தோன்றியிருப்பது மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
தேனினுமினிய இந்த திரையிசைப் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் தரண் இந்தப் பாடல் உருவான விதம் பற்றி விளக்குகையில்….
உயிரே வா பாடலுக்கான கம்போஸிங் முடிந்ததும், பெருமுயற்சி ஏதுமின்றி இயல்பாகவே இந்தப் பாடல் வரிகளுக்கு அழுத்தம் தரக்கூடிய ஒரு பிரத்யேக குரல் இருந்தால்தான் இந்தப் பாடல் உயிர் பெறும் என்று தோன்றியது. தனிப்பட்ட முறையில் எனக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சாரின் தனித்துவம் மிக்க எளிமையான குரல் மிகவும் பிடிக்கும். எனவே அவரைப் பாடவைத்துப் பார்க்கலம் என்று தோன்றியது. எங்கள் கணிப்பு மிகச் சரியானது என்பது பாடல் பதிவு முடிந்ததும் நிரூபணமானது.
ஒரு இன்ப அதிர்ச்சியாக கெளதம் வாசுதேவ் மேனன் சார் இந்தப் பாடலுக்கான ப்ரொமோஷனல் வீடியோவையும் வடிவமைத்தது, எங்கள் பணிகளை அழகாகவும் நேர்த்தியாகவும் ஆக்கித் தந்திருக்கிறது. மேலும் பிரீத்தி இப்பாடலை புதுமையான முறையில் இயக்கியிக்கிறார்.
எளிமையான, ஆனால் வலிமையான வார்த்தைகளால் இந்தப் பாடலை எழுதியிருக்கும் ஆர்.ஜே.விஜய்க்கும், ஆன்மாவை ஆக்ரமிக்கும் அற்புதக் குரலால் பாடலுக்கு பலம் சேர்த்திருக்கும் அலிஷா தாமஸுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்
எதிர்வரும் அக்டோபர் 11ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரும் பப்பி படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, முரட்டு சிங்கிள் இயக்கியிருக்கிறார். தரண் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு திலீப் குமார் பதே ஒளிப்பதிவு செய்ய, ரிச்சி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!