Friday, May 29
Shadow

அவனே ஸ்ரீமன் நாராயணா திரை விமர்சனம்

நடிப்பு – ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவத்சவா
மற்றும் பலர்

தயாரிப்பு – புஷ்கர் பிலிம்ஸ்

இயக்கம் – சச்சின் ரவி

இசை – அஜனீஷ் லோக்நாத்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 3 ஜனவரி 2020

ரேட்டிங் – 3.5/5

கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து வெளிவந்துள்ள திரைப்படம். கன்னடத்தில் கடந்த வருடம் வெளியான கேஜிஎப் படம் தமிழ், ஹிந்தியிலும் டப்பிங் ஆகி வரவேற்பு பெற்றதால் இந்தப் திரைப்படத்தையும் அப்படியே வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

திரைப்படத்தின் கதை பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அதை மேக்கிங்கில் பேலன்ஸ் செய்து இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சச்சின் ரவி.

தமிழில் வெளிவந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் சாயல் இந்த திரைப்படத்தில் மிகவும் அதிகமாக உள்ளது.

அமராவதி என்ற கற்பனை நகரம். அங்கு அபிரர்கள் என்ற கொள்ளையர்களின் அட்டகாசம் இருக்கிறது. ஒரு புதையலை அவர்கள் கொள்ளை அடிப்பதற்கு முன்பாகவே ஒரு நாடகக் குழு கொள்ளையடித்து விடுகிறது.

அவர்களைப் பிடித்து கொலை செய்கிறார் அபிரர்களின் தலைவன். மரணப் படுக்கையில் இருக்கும் அவர், அடுத்து வாரிசு யார் என்று அறிவிக்காமலே இறந்து விடுகிறார். அவருடைய முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் தான் வாரிசு என அறிவித்துக் கொள்கிறார்.

இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் அபிரர்கள் கோட்டையை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

15 வருடங்களுக்குப் பிறகு அமராவதி நகரில் இன்ஸ்பெக்டராக வருகிறார் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி. புதையலால் போட்டியிட்டுக் கொண்டிருக்கும், அபிரர் தலைவன், அவரது எதிரி, மறைந்து வாழும் மீதி நாடகக் கலைஞர்கள் ஆகியோர்களை சமாளித்து அந்த புதையல் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவர் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி, ஸ்டைலான, அதிரடியான இன்ஸ்பெக்டராக கவர்கிறார். தனக்கு எதிராக இருப்பவர்களை அவர் புத்திசாலித்தனமாக சமாளிக்கும் விதம் மிக மிக அருமை.

பத்திரிகையாளர் போர்வையில் நாடகக் கலைஞராக கதாநாயகி ஷான்வி ஸ்ரீவத்சவா. அவர்தான் நாடகக் கலைஞர்களுக்கு தலைமை போல இருக்கிறார் என்பது எதிர்பாராத திருப்பம்.

அபிரர் தலைவனாக பாலாஜி மனோகர், அவரது சகோதர எதிரியாக பிரமோஷத் ஷெட்டி. கான்ஸ்டபிளாக அச்யுத் குமார். கற்பனை கதைக் களம், கற்பனையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் நடிக்க எந்த எல்லையும் இல்லை. இருந்தாலும் அதில் நம்பகத் தன்மையுடன் அனைவரும் மிக அருமையான நடித்திருக்கிறார்கள்.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது.

Read Also  உணர்வு - திரை விமர்சனம்

ஒரு கற்பனை நகரம் என்பதால் அதில் ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் முக்கிய பங்காற்ற வேண்டும். அதை இருவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். படத்தின் நீளம்தான் மிகவும் அதிகம்.

இரண்டு, மூன்று செட்டுகள், கொஞ்சம் வெளிப்புறப் படப்பிடிப்பு என மாறி மாறி அவற்றுக்குள்ளேயே மொத்த படமும் வருவது கொஞ்சம் போரடிக்கிறது. படத்தில் இன்னும் சுவாரசியமான காட்சிகளை வைத்திருக்கலாம்.

15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன புதையலைக் கண்டுபிடிக்க முயல்வதுதான் கதை. அதை எவ்வளவு பரபரப்பாகக் கொடுத்திருக்கலாம். அதில்தான் கதையை எழுதிய ஏழு பேர் குழு கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறது. அதை சரி செய்திருந்தால் இந்தப் படமும் கேஜிஎப் போல பேசப்பட்டிருக்கும்.

அவனே ஸ்ரீமன்நாராயணா – அதிரடியான போலீஸ்