இயற்கை விவசாயத்தோடு வாழ்ந்து  வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது – கிஷோர்

ஆடுகளம், வடசென்னை படங்களில் நடித்த, கிஷோர், ஹவுஸ் ஓனர் படத்தில் நடித்தது குறித்து நம்மிடையே பேசியதிலிருந்து:

ஹவுஸ் ஓனர் படத்தில், என்ன பாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?
முதலில் போன் போட்டு, ‘வயதான பாத்திரம் நடிக்கிறீர்களா’ என்று தான் கேட்டனர். கதை சொன்ன போது, ரொம்பவே பிடித்து போனது. இந்த கதையை விட்டால்,போய்விடும் என யோசித்தேன். ஏற்கனவே பொன்மாலைப்பொழுது என்ற படத்தில், வயதான பாத்திரத்தில் நடித்தேன். அதன் பின் நிறைய, அதே போன்ற கேரக்டர்கள் வந்தன; ஏற்கவில்லை. இந்த படத்தில், ‘ரிஸ்க்’ இருந்தாலும், கதை அற்புதமாக இருந்தது. அதனால், நடிக்க சம்மதித்தேன்.

குறைவான சம்பளமே வாங்குகிறீர்களே… ஏன்?
அப்படியெல்லாம் இல்லை. படத்தின் பட்ஜெட்டை பொறுத்து தான், சம்பளம் வாங்குவேன். எனக்காக தனியே மேக்கப்மேன், உதவியாளர் யாரும் இல்லை. அனைத்திற்கும் மேலாக நான், உலக மகா கஞ்சன்.

இயக்குனர் வெற்றிமாறனுக்கும், உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி?
ஆடுகளம், வடசென்னை படங்களில் நடித்தேன். அசுரன் படத்தில் நடிக்கவில்லை. என்னை எப்படி பயன்படுத்தலாம் என, அவருக்கு தெரிந்திருக்கிறது. அவர் எந்த மாதிரி வேலை கேட்பார் என, எனக்கு தெரியும்.

எதிர்காலத்தில் இயக்குனர் ஆவீர்களா?
நான் சோம்பேறி. அதற்கெல்லாம் நான் முயற்சிக்கவில்லை.

உங்களுக்கு கொடுத்த சம்பள காசோலை திரும்ப வந்துள்ளதா?
நிறைய நடந்திருக்கிறது. வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய காசோலையை கொண்டு போய் கொடுப்பேன். இதன் மூலமும், சிலரின் நட்பு தொடர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு வகை லாபம் தான்.

சினிமா, விவசாயம் தாண்டி வேறு ஏதாவது?
முன்பெல்லாம், காட்டில் அதிக நேரம் செலவழிப்பேன். இப்போது, இயற்கை விவசாயத்தோடு வாழ்ந்து வருகிறேன்.

எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்க ஆர்வம். சினிமாவில் சமூக அக்கறை இருந்தால், எனக்கு பிடிக்கும்.

அரசியல் ஆர்வம் உண்டா?
அரசியலில் உள்ள ஆர்வம் ஓட்டு போடுவது மட்டும் தான். மற்றபடி, அதில் இறங்கும் ஆர்வம் இல்லை. எனக்கு சினிமா, விவசாயம், இதில் தான் ஆர்வம்.

இயற்கை விவசாயம் எப்படி உள்ளது?
இயற்கை விவசாயம் இப்போது பரவாயில்லை. மழை வரும் வாய்ப்பு உள்ளது. ஓசூருக்கும் பெங்களுரூக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி அருகே உள்ள, 2 ஏக்கர் இடத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.

ஒரே மாதிரி பாத்திரத்திலேயே நடிக்கிறீர்களே?
நிறைய வித்தியாசமான கதைகளில் நடித்துள்ளேன். சில படங்களில் சின்ன பாத்திரம், சிறிய படம் என்பதால் வெளியே தெரியவில்லை.