செவன் ( 7 ) – திரை விமர்சனம்

நடிப்பு – ரகுமான், ஹவிஸ், ரெஜினா, நந்திதா மற்றும் பலர்
 
தயாரிப்பு – ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்
 
இயக்கம் – நிசார் ஷபி
 
இசை – சைதன் பரத்வாஜ்
 
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
 
வெளியான தேதி – 5 ஜுன் 2019
 
ரேட்டிங் – 2.25/5
 
ஒரு த்ரில்லர் படமாக ஆரம்பித்து படம், அப்படியே காதல் கதை உள்ள படமாக மாறி, பழிக்கு பழி வாங்கும் படமாக முடிகிறது. புது இயக்குனர் நிசார் ஷபி கதையாக நன்றாக பல கோணங்களில் யோசித்து  எழுதியிருக்கிறார். ஆனால், அதை கதையை திரைக்கதையாக மாற்றும் போது இடைவேளை வரை பரபரப்பை இல்லாமல் குறைத்துவிட்டார்.
 
கதாநாயகன் ஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.
 
இந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான் உதவி கமி‌ஷனராக இருக்கும் போலீஸ் ஸ்டே‌ஷனுக்கு தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் நந்திதா. இதை கேட்கும் ரகுமான் அதேபோல் இன்னும் ஒரு பெண் ஹவிஷை தன் கணவர் என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகார் கொடுத்துள்ளதை கூறுகிறார். அடுத்து இன்னொரு பெண்ணும் அதே போல் புகார் கொடுக்கிறார்.
 
கணவரைப் பற்றி அவர் உதவி கமிஷனர் ரகுமானிடம் சொல்லி வரும் போது, அதே போன்று தன் கணவர் கதாநாயகன் ஹவிஷைக் காணவில்லை என்று அனிஷா அம்புரோஸ் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளதாகக் கூறி அதிர்ச்சி அளிக்கிறார். ஐதராபாத்திலும் அதிதி ஆர்யா என்பவர் கணவர் ஹவிஷைக் காணவில்லை என புகார் அளித்த விவரம் ரகுமானுக்குத் தெரிய வருகிறது. சீட்டிங் கேஸ் மற்றும் பல பெணகளை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கு பதிவு செய்து சில பல தேடல்களுக்குப் பிறகு கதாநாயகன் ஹவிஷைக் கைது செய்கிறார் உதவி கமிஷனர் ரகுமான். அவரை காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது, தனக்கும் அந்த மூன்று பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதியாகச் சொல்கிறார் கதாநாயகன் ஹவிஷ். அப்போது,  மும்பையில் இருந்து நான்காவதாக த்ரிதா சௌத்ரி வந்து தன் கணவர் ஹவிஷைக் காணவில்லை என்கிறார். லாக்கப்பில் இருக்கும் கதாநாயகன் ஹவிஷை உதவி கமிஷனர் ரகுமான் காட்ட, அவரைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் த்ரிதா. இந்த குழப்பங்களுக்குத் தீர்வு என்ன என்பதுதான் மீதிக் கதை.
 
 இடைவேளைக்குப் பின்தான் கதையில் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் படம் நகர்கிறது. இருந்தாலும் சில  யேசிக்க முடியாத  காட்சிகள் படத்தின் தரத்தைக் குறைத்துவிடுகிறது.
 
இப்படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் யார் யார் படத்தில் நடித்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் படிப்பதற்கே ஒரு குழப்பம் வரும். ரகுமான் உதவி போலீஸ் கமிஷனர். ஹவிஷ் என்பவர்தான் படத்தின் கதாநாயகன். படத்தின் திரைக்கதை வரிசைப்படி வரும் கதாநாயகிகளாக நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி, ரெஜினா கசான்ட்ரா, புஜிதா பொன்னடா. இவர்களில் முதலில் உள்ள நால்வர் கதைப்படி  கதாநாயகன் ஹவிஷை தங்கள் கணவர் என்கிறார்கள். ரெஜினா, புஜிதா ஹவிஷின் காதலர்கள். ஹவிஷ் – ஆறு நாயகிகளுக்குள் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.
 
உதவி போலீஸ் கமிஷனராக ரகுமான். வழக்கமானன போலீஸ் வேடம்தான். 
அவருடைய நடிப்பில் அவரது பல வருட அனுபவம் பேசுகிறது. ஆனால், இந்தக் காலத்தில் எந்த ஒரு போலீஸ் அதிகாரி எப்போதும் குடித்துக் கொண்ட வழக்கு விசாரணையை மேற்கொள்கிறார். ஒரு காட்சியில் கூட அவர் யூனிபார்ம் அணியவேயில்லை. 
 
ரகுமானுக்கு அவர் வேலை நேரத்தில் குடிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
 
ஆறு கதாநாயகிகளுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கதாநாயகன் ஹவிஷுக்கு. நடிப்பில் ஆறு கதாநாயகிகளும் அவரை ஓவர்டேக் செய்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவத்தில் நடித்து இருக்கிறார் கதாநாயகன் ஹவிஷ். படத்தின் மைனஸ் என்பது இவரது நடிப்பு என தாரளமாகச் சொல்லலாம்.
 
ஆறு கதாநாயகிகளில் பிளாஷ்பேக்கில் வரும் ரெஜினா கசான்ட்ராவுக்குத்தான் நல்ல வாய்ப்பு. சந்திரமுகி ஜோதிகா கதாபாத்திரத்திலிருந்து இந்தக் கதாபாத்திரத்தை உருவியிருக்கிறார் இயக்குனர். ரெஜினா இதுவரை நடித்த தமிழ்ப் படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். மற்ற நாயகிகளில் அனிஷா, நந்திதா, த்ரிதா ஆகியோருக்கு ஓரளவிற்கு நடிக்கவே வாய்ப்பு. அதிதி, புஜிதாவிற்கு படத்தில் ஒரு வார்த்தை பேசக் கூட வாய்ப்பு கிடையாது.
 
கிளைமாக்சுக்கு முன்பாக மற்ற எல்லாரையும் விட தன் இயல்பான வில்லித்தனமான நடிப்பில் படத்தை சுமக்கிறார் அந்த வயதான பாட்டி.
 
படத்தை இரு மொழிகளில் எடுத்திருப்பதால் சென்னை, ஐதராபாத் என மாறி மாறிக் காட்டி கதை எந்த ஊரில் நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்ப் படம் பார்ப்பவர்கள் அதை சென்னை என நினைத்துக் கொள்ள வேண்டும், தெலுங்குப் படம் பார்ப்பவர்கள் அதை ஐதராபாத் என நினைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு பதிவு வண்டிகளும், தெலங்கானா பதிவு வண்டிகளும் அடுத்தடுத்த காட்சிகளில் மாறி மாறி வந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால், தமிழ்ப் படம் பார்க்கிறோமா, தெலுங்குப் படம் பார்க்கிறோமோ என்ற உணர்வு வருகிறது.
 
நந்திதா, அனிஷா, அதிதி ஆகியோர் கதாநாயகன் ஹவிஷ் அவர்களின் கணவர் என்று புகார் கொடுத்ததன் காரணம் கடைசியில் தெரிய வரும் போது அது நம்பும்படியாக இல்லை.
 
இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதால் காட்சிகளை மிகவும் அழகான பிரேம்களில் காட்டுகிறார். ஆறு நாயகிகள் இருந்தாலும் படத்தில் கிளாமர் இல்லை என்பது ஆறுதல். நாயகிகளை கிளாமராகக் காட்ட வாய்ப்புகள் இருந்தாலும் அதைத் தவிர்த்திருக்கிறார். இயக்குனர்
 சைதன்யா பரத்வாஜ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார்தான். உள்ளது
 
ஸ்கிரிப்பிட்டை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் இந்த செவன் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும்.
 
7 (ஏழு) – இன்னும் நன்றாக திரைக்கதை அமைத்திருந்தால். மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கும்