தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : விஷால் தனி அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்துவது குறித்து தமிழக அரசும், சங்க தலைவர் விஷாலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என்.சேகரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்து உத்தரவிட்டது.
தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் பதவி காலம் முடிந்துவிட்டதால், சங்கத்தின் தேர்தலை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு வழக்கையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை செயலாளர், பத்திரப்பதிவுத்துறை தலைவர், சங்கத்தை தற்போது நிர்வகிக்கும் தனி அதிகாரி, சங்க தலைவர் விஷால் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.