தர்பார் திரை விமர்சனம்

நடிப்பு – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் யோகிபாபு, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், சூரி மற்றும் பலர்.

தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ்

ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

இசை – அனிருத்

மக்கள் தொடர்பு : ரியாஸ் அஹ்மது மற்றும் டைமண்ட் பாபு

வெளியான தேதி – 9 ஜனவரி 2020

ரேட்டிங் – 3./5

 

 

தமிழ் திரைப்பட உலகில் வந்திருக்கும் மற்றுமொரு போலீஸ் படம். ஆனால், இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம். அதுதான் படத்தின் வித்தியாசம். அதுதான் திரைப்படத்தையும் தூக்கியும், தாங்கியும் பிடிக்கிறது.

இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயர் காவல் துறை அதிகாரியாக நடித்தால் எப்படி இருக்கும் என்பது தெரியாது.

அவரது நடிப்பில் உருவான பழைய திரைப்படங்களைப் பார்த்திருந்தால் தான் தெரியும். இருந்தாலும் காக்கிச் சட்டையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் என்ன என்பதை இந்தப் திரைப்படம் மூலம் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தக் கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களோ இல்லையோ, ஏமாற்றத்தைத் தரவில்லை. ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாகக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். அதில் முழு மூச்சாக செயல்பட்டிருக்கிறார்.

கதை என்று சொன்னால் அதே வழக்கமான போலீஸ் பார்முலா பழி வாங்கல் கதைதான். மும்பை மாநகரில் போதைக் கும்பலின் நடமாட்டமும், பெண்கள் கடத்தலும் அதிகமாக இருக்கிறது. அவற்றை ஒடுக்க, அதிரடி உயர் காவல் துறை அதிகாரியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை கமிஷனர் ஆக நியமிக்கப்படுகிறார்.

தனது அதிரடியால் அவற்றைக் கட்டுப்படுத்துகிறார் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு பெரிய தொழிலதிபரின் மகனை அதற்காக கைது செய்து சிறையிலடைத்து, ஒரு காரணத்திற்காக என்கவுண்டரும் செய்கிறார்.

அதன்பின் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் நிவேதா தாமஸ் விபத்து ஒன்றில் கொல்லப்படுகிறார். அந்த தொழிலதிபரும் கொல்லப்படுகிறார். அவர்களைக் கொன்றது யார் என்று தெரியாமல் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேட ஆரம்பிக்கிறார். அந்த கொலையாளி வில்லனை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

மும்பை மாநகரத்திற்கு
கமிஷனராக ஆதித்யா அருணாச்சலம் ஆக கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய ஸ்டைல், பேச்சு, நடிப்பு என ஒவ்வொன்றிலும் அவரது ரசிகர்களை ஆகா என்று சொல்ல வைக்கிறார்.

இப்படி ஒரு கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது என நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு நடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

“காலா, கபாலி, பேட்ட” என கொஞ்சம் வயதான, வேறு விதமான ரசிகர்களைப் பார்த்து சோர்ந்து போயிருந்த இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் மிகப் பெரும் விருந்து படைத்திருக்கிறார்
கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தன்னை ஒரு ரசிகராகவே மாற்றிக் கொண்டு கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தைப் பிடிக்க ஆசைப்படும் மற்ற கதாநாயகர்களுக்கு இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு அந்த ஆசை வரவே கூடாது வரவும் வராது.

இயக்குனர் முருகதாஸ் கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா இந்தப் படத்தில் ஏமாந்து போய் விட்டார் அல்லது ஏமாற்றப்பட்டுவிட்டார். இடைவேளைக்கு முன் இரண்டு காட்சிகள், இடைவேளைக்குப் பின் நான்கு காட்சிகள் என அவர் வேலை முடிந்து போகிறது. இருவரையும் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேச வைத்து, ஒரு டூயட் பாடலாவது சேர்த்திருக்கலாம். அதைவிட்டு சம்பந்தமே இல்லாமல் ஒரு கல்யாண வீட்டுப் பாடலை தேவையில்லாமல் வைத்திருக்கிறார்கள். நயன்தாராவை இளமையாகவும் காட்டாமல், கொஞ்சம் ஆன்ட்டி ஆகவும் காட்டாமல் இரண்டுக்கும் இடையில் காட்டியிருக்கிறார்கள். கஜினி படத்திற்காக புலம்பியது போல மீண்டும் இந்தப் படத்திற்காகவும் நயன்தாரா புலம்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த திரைப்படத்தின் கதாநாயகி என்று சொன்னால் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸைத்தான் சொல்ல வேண்டும்.

ஒரு சில காட்சிகள் தவிர படம் முழுவதும் வருகிறார். அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்துவதிலும், அப்பா நன்றாக இருக்க வேண்டும என்பதற்காகவும் அவர் செய்யும் செயல்கள் சுவாரசியமானவை. அதிலும் ஒரு காட்சியில் நினைவிழந்து இருக்கும் அப்பா மீது படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தில் நகைச்சுவைக்காக ஒருவர் வேண்டும் என்பதற்காக யோகி பாபுவைச் சேர்த்திருக்கிறார்கள். அவரும் தன் பங்கிற்கு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லனாக சுனில் ஷெட்டி. கதாநாயகனும், வில்லனும் மோதிக் கொள்ளும் ஒரே ஒரு காட்சி கிளைமாக்சாக மட்டுமே அமைவது படத்திற்கு மைனஸ். எதிரி யாரென்றே தெரியாமல் கதாநாயகன் மோதுவதில் ஹீரோயிசம் அதிகம் வெளிப்படாது. இருப்பினும் அது தெரியாத அளவிற்கு சமாளித்துவிட்டார் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ்

இந்த திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பாட்டு வரப் போகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆடப் போகிறார் என்று தெரிந்ததுமே, தட்லாட்டம் தாங்க, தர்லாங்க நீங்க என நம் வாய் பாட ஆரம்பித்துவிடுகிறது. அட, அது பேட்ட பாட்டுதானே என ஞாபகம் வந்த பிறகுதான், இந்தப் படத்தில் சும்மா கிழி பாட்டுதானே வரணும் என நம்மை நாமே திருத்திக் கொள்ள நேரிடுகிறது. அது போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் திருத்திக் கொண்டால் நல்லது. அந்த ஒரு பாடல் தவிர மற்ற பாடல்கள் ஒரு முறை கூட கேட்கும் ரகமல்ல. பாடல்கள் மிகவும் சுமாராக உள்ளது

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை எவ்வளவு ஸ்மார்ட் ஆக காட்ட முடியுமோ அவ்வளவு காட்டியிருக்கிறார். படத் தொகுப்பாளர் ஒரு 20 நிமிடத்தை கட் பண்ணியிருக்கலாம்.

ஆரம்பத்தில் போதைப் பொருளைக் கடத்துவது யார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டுபிடிப்பதே ஒரு அரை மணி நேரம் போகும் போலிருக்கிறது. அந்தக் காட்சிகளுக்கு அவ்வளவு நேரம் தேவையா ?. ஒரு கல்யாணப் பாடல், ரயில்வே ஸ்டேஷன் பாடல் இரண்டுமே தேவையில்லை. அவை படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்கள்.

போதைப் பொருள் கடத்தல், ஒரு வில்லன், மகள் இழப்பு, அதிரடி போலீஸ் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே கதை நகர்கிறது. இதுதான் நடக்கப் போகிறது என யூகிக்கக் கூடிய டெம்ப்ளேட் காட்சிகள் என ஆங்காங்கே சில குறைகள். இருந்தாலும் தன்னுடைய தாறுமாறான ஸ்டைலால் அதையெல்லாம் மறக்க வைக்கிறார் தனி ஒருவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தர்பார் – சூப்பர் ஸ்டாரின் ராஜ்ஜியம்