பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது பயங்கர தாக்குதல்

தென்னாப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார்.

பிரிடேட்டர், டெர்மினேட்டர், பார்பரியன், டோட்டல் ரீகால், கமாண்டோ உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அர்னால்டு ‘ஜர்னி டூ சைனா’, மற்றும் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். அங்குள்ள நிர்வாகிகளுடன் விளையாட்டு தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் வேகமாக பாய்ந்து வந்து அர்னால்டு முதுகில் தனது இரண்டு கால்களாலும் எட்டி உதைத்தார். இதை சிறிதும் எதிர்பாராத அர்னால்டு நிலை குலைந்தார். அவரது பாதுகாவலர்களும் அதிர்ச்சியானார்கள்.

அர்னால்டு முதுகில் மிதித்தவரை உடனடியாக மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது அர்னால்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அர்னால்டை முதுகில் உதைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அர்னால்டை உதைத்தவர் யார்? எதற்காக அவரை தாக்கினார் என்ற காரணங்கள் தெரியவில்லை. கைதானவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்