ரத்ததானத்தில் சாதனை படைத்தவருக்கு ரஜினிகாந்த் பாராட்டு
பிரகாஷ் என்ற மாற்றுத் திறனாளி 100 தடவைக்கு மேல் ரத்ததானம் கொடுத்து சாதனை படைத்துள்ளார். ஒரு மாற்றுத்திறனாளி இந்த அளவிற்கு ரத்ததானம் செய்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது. அவரை ரஜினி அழைத்து பாராட்டினார். இதுகுறித்து பிரகாஷ் கூறியதாவது:
நான் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். ஆனாலும் மனம் தளராதவன். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் சின்ன வயதிலிருந்தே இருந்தது. மாற்றுத் திறனாளியான நான் எந்த வகையில் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை கண்டுபிடித்து ரத்ததானத்தை தேர்வு செய்தேன். இதுவரை 100 முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து ரத்ததானம் மற்றும் உடல்தான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறேன்.
இதற்காக எனக்கு சாதனை சான்றிதழ் வழங்கி உள்ளனர். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த சாதனை சான்றிதழை அவர் கையால் வாங்க விரும்பினேன். இதை அவரது ரசிகர்கள் மன்றம் மூலம் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் என்னை அழைத்து பாராட்டினார். அவர் கையால் அந்த சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்டேன். என்றார்.