ஷாகித் கபூருக்கு மெழுகுச் சிலை

ஷாகித் கபூருக்கு மெழுகுச் சிலை
பாலிவுட்டில் ‘இஸ்க் விஸ்க்’ திரைப்படத்தின் மூலமாக 2003-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஷாகித் கபூர்

இஸ்க் விஸ்க்’ திரைப்படத்தின் மூலமாக 2003-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஷாகித் கபூர். தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியவர்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், இந்தி திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புகழ்பெற்ற திரையுலக பிரபலங்களுக்கு பிரசித்தி பெற்ற அருங்காட்சியகமான ‘மேடம் டுசாட்ஸ் மியூசிய’த்தில் மெழுகுச் சிலை வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிப்போய் விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ்பாபுவுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து இந்தி திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் ஷாகித் கபூருக்கும் அங்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. தனக்காக வைக்கப்பட்டுள்ள மெழுகுச் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஷாகித் கபூர், 

“இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இங்கு நிற்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு. அதே கனவு எனக்கும் இருந்தது. அந்த கனவு நனவாகி இருக்கிறது. இந்த இடத்தில் நிற்பது பெருமையாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.