இசையமைப்பாளர் இனியவன் படைப்பில் உருவாகியிருக்கும் ‘பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்’ கரோனா விழிப்புணர்வு பாடல்.

உலகையே ஸ்தம்பிக்க வைத்து, கண்ணுக்கு தெரியாமல் பெரும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலை, தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் இனியவன்.

‘கௌரி மனோகரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இனியவன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால், சிறுவயது முதலே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்.

தனது கடுமையான உழைப்பினால், முதல் படத்திலேயே கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு தொழில்முறை நெருக்கத்தை எற்படுத்திக் கொண்ட இனியவன், கவிஞர் வைரமுத்து வரிகளில், எஸ். பி. பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி, சித்ரா உள்ளிட்ட பல்வேறு பாடகர்களின் குரலில் பல நல்ல பாடல்களை படைத்திருக்கிறார்.

2004ம் ஆண்டு முன்னாள் முதலைமைச்சர் டாக்டர் கலைஞர் முன்னிலையில், கவிஞர் வைரமுத்துவின் ‘கவிதையே பாடலாக – 1’ என்ற பாடல் தொகுப்புக்கு இனியவன் மேடையிலேயே இசையமைத்து பாடல்களை அரங்கேற்றிய விதம் அவருக்குப் பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு கவிதையே பாடலாக – 2ம் தொகுப்பு மற்றும் அதே ஆண்டில் ‘சுனாமி பாடல் தொகுப்பு’ உள்ளிட்ட படைப்புகள், 2009ம் ஆண்டில் சுதா ரகுநாதன் குரலில், கவிஞர் வைரமுத்து வரிகளில் இவர் வெளியான ‘கல்லறைப் பாடல்’ பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், பல்வேறு சர்வதேச இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். இந்த இக்கட்டான ஊரடங்கு நேரத்திலும் கரோனா விழிப்புணர்வு பாடலை, எழுதி, இசையமைத்து, பாடி, பகிர்ந்திருப்பது மிகுந்த வரவேற்புக்கு உரியது.

 

error: Content is protected !!