நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.!!

நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.!!

சென்னை 19 மார்ச் 2023 ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.

மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “‘பத்து துல’ படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது.

என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘முன்பே வா என் அன்பே வா’ பாடலை குறிப்பிடுவேன்.

இப்பொழுது வரைக்கும் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்தும் அது பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது.

முதலில் அந்த பாடலுக்கு இசையமைத்துவிட்டு, இது மிகவும் சோகமாக இருக்கிறது என்று இயக்குநரிடம் சொன்னேன்.

ஆனால், அது நிச்சயம் வெற்றியடையும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார்.

அப்படியே நடந்தது. அதை சரியாக கணித்து அவர் என்னிடம் சொன்னார்.

அவருடைய பொறுமை, இசைமேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என இது எல்லாமும் நான் இந்த படம் ஒத்துக் கொள்ள காரணங்கள்.

படத்தின் அனைத்து பாடல்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அக்கரையில..’ பாடல் சிம்பு பாட வேண்டியது.

ஆனால் அவர் அந்த சமயத்தில் தாய்லாந்துக்கு சென்று விட்டதால் இந்த பாடலை நான் பாடினேன்.

டி.ஆர். சார் இங்கு இருக்கிறார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ என லைட்மேன்களுக்காக இணையதளம் ஒன்று ஆரம்பித்துள்ளோம்.

படத்திற்கு ஒளிபாய்ச்சுவது அவர்கள்தான். அவர்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது.

இந்த இணையதளத்தை சிம்பு லான்ச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்’ என ரஹ்மான் வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

அடுத்து மேடை ஏறியவர் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட டி. ராஜேந்திரன். அவர் பேசியதாவது…

இப்படி மேடை ஏறி உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை.

உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை.

நான் அமெரிக்கா சென்று என் உடல் ஆரோக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்த பிறகு கூட்டம் இருக்கும் இடங்களுக்கு பெரிதாக நான் செல்வதில்லை.

ஆனால் இங்கு இருப்பதும் திரளான கூட்டம்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று என் மகனுக்கு ஒரு நாட்டம்.

நான் வரவில்லை என்றால் என் மகனுக்கு வந்து விடும் வாட்டம்.

என்னை பார்த்ததும் எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு ஆனந்த நீரோட்டம். அதற்கு காரணம் இந்த ‘பத்து தல’ என்ற தேரோட்டம்.

என் மகனும் என்னை போல் தமிழில் பேசட்டும், இறைவன் அருளால் பல காலம் வாழட்டும். இப்படி நான் பேச ஆரம்பித்தால் விடியும் வரை பேசிக் கொண்டிருப்பேன்.

ஆனால் அதிகம் நான் பேசக்கூடாது என்று என் மனைவி உஷா அன்பு கட்டளை விதித்துள்ளார்.

சிம்பு என்னை மேலே ஏறக்கூடாது என்று சொல்வார்.

அப்படியே ஏறினாலும் அவரது ரசிகர்களை நான் திருப்தி படுத்தாமல் கீழே வரக்கூடாது என்று சொல்வார்.

கலைஞனாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வார்.

அமெரிக்கா போய் விட்டு நான் இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகனின் அன்பு.

அந்த அன்புக்காகவே இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்’ என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அடுத்து இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது…

நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்.

இந்த படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான்.

ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தோம்.

கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம்.

சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம்.

ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது.

அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான்.

சினிமாவில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பார்கள்.

பிறகு ஞானவேல் ராஜாவிடம் நான் பேசினேன்.

ஒரு முடிவை எடுத்தால் அதை மாற்றாதவர் ஞானவேல் ராஜா.

ஆனால் நான் பேசிய பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் மனதை மாற்றியது எது என தெரியவில்லை.

இது அனைத்தும் கடவுளின் அருள்தான். நேற்று கூட டிரைய்லரை முடித்து விட்டு ரஹ்மான் சாரிடம் இசை கேட்டேன்.

அவர் செய்துவிடலாம் என பாசிட்டிவாக பேசி செய்து கொடுத்திருக்கிறார்.

எஸ் டி ஆர்- ஐ பற்றி பேச வேண்டும் என்றால் அவருடைய நண்பராக நான் சொல்கிறேன்.

எனக்கும் அவருக்கும் 20 வருட பழக்கம். அவருடைய ‘தம்’ படத்திற்கு பிறகு நான் படம் இயக்க வேண்டியது.

அது தள்ளி போய் இப்போது தான் நடந்திருக்கிறது.

படப்பிடிப்பில் மிகவும் தயாராக இருப்பார். வசனங்களை முந்தின நாள் இரவே வாங்கி படித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வருவார்.

என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

அந்த விஷயம்தான் இந்தப் படத்தை நான் நினைத்ததுபோல எடுக்க வைத்தது.

கெளதம் கார்த்திக்கை நான் நிறைய படுத்தி இருக்கிறேன்.

ஆனாலும் அவ்வளவு பொறுமையாக இருப்பார். ரஹ்மான் சார் பற்றி நான் பேச வேண்டும் என்றால் நிறைய கதைகள் இருக்கிறது.

அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் நான் மாறி இருக்கிறேன். நன்றி சார்”.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது…

எனக்கும் சிம்புவுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவருக்கு இணையான எதிரி அவரை தவிர வேறு யாருமில்லை என்று நினைக்கும் பாசிட்டிவான எண்ணம் தான்.

நான் சிம்புவை முதல்முறை சந்தித்தபோது எத்தனை எளிமையாக இருந்தாரோ இத்தனை வருடங்கள் கழித்தும் அதேபோலத்தான் இருக்கிறார்.

அவருடைய நல்ல குணத்திற்காகவே இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை கடந்து இப்பொழுது நாங்கள் நிற்கிறோம்.

இந்த படத்திற்கு பிறகு அவருக்கு வேறொரு பெரிய இடம் காத்திருக்கிறது.

அடுத்து கௌதம் கார்த்திக்! என்னுடைய மகனாகவே அவரைப் பார்க்கிறேன்.

என்னுடைய அடுத்த சினிமா வாரிசு அவர்தான். அவருடைய கடின உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் இன்னும் ஒன்று இரண்டு வருடங்களில் தவிர்க்க முடியாத ஒரு கதாநாயகனாக நிச்சயம் வருவார்.

அடுத்து கிருஷ்ணா! என்னுடைய சிறந்த நண்பர்.

இடையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார்.

ஆனால் ஒருமுறை கூட என்னிடம் கதை சொல்கிறேன்,

படம் இயக்குகிறேன் என்று வாய்ப்பு கேட்டதே இல்லை.

நானே தான் அவரிடம் எனக்கு படம் இயக்க வேண்டும் என்று கேட்டேன்.

இந்த படம் ஜெயித்து, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறுவதற்கான இடம் அவருக்கு இருக்கிறது என்பது எனக்கு பெருமையான ஒரு விஷயம். படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி”.

படத்தின் கதாநாயகி ப்ரியா பவானி ஷங்கர் பேசியதாவது…

விழா பிரம்மாண்டமாக நடக்கும் என்று தெரியும். ஆனால், இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இயக்குநர் கிருஷ்ணா மிகவும் பொறுமையான உறுதியான மனிதர்.

சிலம்பரசனில் இருந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை எல்லாரையும் ஒன்று போலவே மதித்து மரியாதையாக நடத்தினார்.

அதற்கு எப்பொழுதுமே அவருக்கு நன்றி சொல்கிறேன்.

அடுத்து கௌதம் மேனன் சார். அவர் நடித்து வெளியாகும் படங்களை பார்க்கும் பொழுது பயமாக இருக்கும்.

அவர் இயக்கத்தை கைவிட்டு விடுவாரோ என்று. கெளதம் சார் தயவு செய்து நிறைய படங்களை எங்களுக்காக இயக்குங்கள்.

மனுஷ்யபுத்திரன் சார் கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன்.

அவரது முதல் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

நான் மிகப் பெரிய ரஹ்மான் சார் ரசிகை.

கடவுள் எங்களுக்காகவே உங்களை ஸ்பெஷலாக படைத்து அனுப்பி இருக்கிறார் என்று தான் சொல்வேன்.

அப்படி இருக்கும் பொழுது உங்கள் இசையில் என்னுடைய முகம் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அடுத்து கௌதம் கார்த்திக்! என்னுடைய தோழியின் கணவர். உங்கள் இரண்டு பேருக்குமே என்னுடைய அன்பு. அடுத்து சிலம்பரசன் சார், அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு அங்கு கிடைக்கவில்லை.

இத்தனை பேருடைய அன்பு அவருக்கு கிடைத்திருக்கிறது என்பது அவருடைய ஆசீர்வாதம் என்றுதான் சொல்வேன்.

இந்த படப்பிடிப்பை எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றி தந்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம்! ‘பத்து தல’ என் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம்.

படத்தில் உழைத்த அனைவருக்காகவும் நிச்சயம் படம் வெற்றியடைய வேண்டும்.

என்னை நம்பி மிகப்பெரிய ஒரு கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா சாருக்கு நன்றி.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்தான்.

ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் சார் அதை அற்புதமாக செய்திருக்கிறார்.

அஜய், சாண்டி, பிருந்தா மாஸ்டருடன் வேலை பார்த்தது எனக்கு ‘கடல்’ படத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது.

கெளதம் மேனன் சாருடன் இந்தப் படத்தில் எனக்கு காட்சிகள் இல்லாதது வருத்தம்தான்.

அறிமுக நடிகராக எனக்கு முதல் படத்தில் ரஹ்மான் சாருடைய இசை மிகப்பெரிய கனவாக இருந்தது.

இப்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறேன்.

படத்தின் பாடல்களை கேட்கும் பொழுது சில இடங்களில் கண் கலங்கினேன்.

அடுத்து எஸ் டி ஆர் அண்ணன்! முதன்முதலில் அவரை 2013 இல் லண்டனில் தான் சந்தித்தேன்.

என்னை அவருக்கு தெரியாது என்று நினைத்தேன்.

ஆனால் அவரே வந்து என்னிடம் பேசி லண்டனை முழுவதும் சுற்றிக்காட்டி பாதுகாப்பாக கூட்டிச் சென்றார்.

அப்போதே அவர் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது. அப்பொழுது அவர் என்னிடம் ஆன்மீக பயணம் குறித்து சொல்லியிருந்தார்.

அந்த சமயத்தில் எனக்கு அது சரியாக புரியவில்லை. இப்பொழுது அதை பின்பற்றி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி வந்திருக்கும் பொழுது அது மிகப்பெரிய பிரமிப்பை தருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் அவர் வந்து நின்றாலே அத்தனை தலையும் அவரை தான் திரும்பி பார்க்கும். கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டால் அவரது தலையில் இருந்து கால் வரை அத்தனையும் நடிக்கும்.

அவர் போல ஒரு நடிகராக மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஏ.ஜி.ஆர்ரின் பவரை நீங்கள் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வந்து பார்த்து ரசியுங்கள்”.

நடிகர் சிலம்பரசன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு வரும்போது எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான்.

அது நான் அழக்கூடாது என்பதுதான். நான் மிகவும் எமோஷனலான ஒரு நபர்.

அப்படி இருக்கும்பொழுது ஏன் அழக்கூடாது என்று நினைத்தேன் என்றால் உங்களுக்காக தான். இவ்வளவு நாள் எல்லா கஷ்டத்தையும் பார்த்தாகி விட்டது.

அந்த கஷ்டத்தை எல்லாம் எனக்காக பார்த்த நீங்கள் இனிமேல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

அந்த சோகம் எல்லாம் முடிந்து விட்டது. இந்த நேரு ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு நிறைய முறை வந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் மற்றவர்களுக்காக கூடிய கூட்டத்தை பார்த்திருக்கிறேன்.

ஆனால் முதல் முறையாக என்னை நேசிக்கும் ரசிகர்களை நேரில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சில காலத்திற்கு முன்பு நான் மனதளவில் மிகவும் அமைதியாக இருந்தேன்.

சினிமா எல்லாம் வேண்டாம் ஆன்மீகம் பக்கம் போகலாம் என்று வீட்டிற்குள்ளேயே இருந்தேன்.

அப்பொழுதுதான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்தார்.

கன்னட படமான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னார்.

இந்த படத்தை அங்கு சூப்பர் ஸ்டார் சிவராஜ் அண்ணா நடித்திருப்பார்.

அவரை போல் எப்படி நடிக்க முடியும் என்று யோசித்தேன்.

பிறகு இந்த படம் நான் ஒத்துக் கொள்ள முக்கிய காரணம் கௌதம்தான்.

இங்கு தட்டிக் கொடுப்பதற்கு தான் ஆள் இல்லை, தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

எனக்கு தட்டி கொடுக்க இத்தனை நாள் வரை இருந்தது ரசிகர்கள் மட்டும்தான்.

கௌதம் கார்த்திக் ஒரு திறமையான நல்ல மனிதர்.

எனக்கு இந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அவருடைய உழைப்புக்கு நிச்சயம் மிகப்பெரிய இடத்தை இது வாங்கி கொடுக்கும்.

இந்த படம் நான் ஒத்துக்கொண்ட பொழுது மிகவும் குண்டாக இருந்தேன்.

அது அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்தது. பின்புதான் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடந்தது.

‘மாநாடு’ படம் வெளியானது. பிறகு மீண்டும் ‘பத்துதல’ படத்துக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது நான் நினைத்திருந்தால் தயாரிப்பாளரை கூப்பிட்டு பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் இப்பொழுது வேறு லைனில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்பொழுதும் என் நினைவுக்கு வந்தது கௌதம் தான்.

அவருக்காக இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் உள்ளே வந்தேன்.

அப்பொழுது இயக்குநர் என்னிடம் மீண்டும் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார்.

நான் அதை செய்து விடுவேன்! ஆனால் பார்ப்பவர்கள் சிம்பு மீண்டும் உடல் எடை அதிகரித்து ஷூட்டிங் வராமல் போய்விடுவான் என்று எழுதி விடுவார்கள்,

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து பார்த்த பொழுது அது செட்டாகவில்லை.

பின்பு 108 கிலோ உடல் எடை அதிகரித்து இப்பொழுது குறைத்தேன்.

‘மீண்டும் உன்னை ரசிகர்கள் திரையில் எதிர்பார்த்து இருக்கும்பொழுது, ரசிகர்களுக்காக மீண்டும் அதிகரித்த உடல் எடையை உன்னால் குறைக்க முடியாதா’ என்று எனக்கு தோன்றியது.

பிறகு உடல் எடை அதிகரிக்க கிருஷ்ணாவிடம் சம்மதம் தெரிவித்தேன்.

என்னுடைய வயதுக்கு இது மெச்சூர்டான ஒரு கதாபாத்திரம்தான். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்து ‘சூர்யா 42’, ‘தங்கலான்’ ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துக்கள். என்னுடைய ரசிகர்களை பார்ப்பதற்கு இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி.

இந்தப் படத்திலேயும் எனக்கு துணை கிடையாது.

நிஜ வாழ்க்கையிலும் துணை இல்லை. அது பிரச்சனை இல்லை! எனக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

தம்’ படத்திற்கு பிறகு கிருஷ்ணா என்னுடன் ஒரு படம் இயக்க வேண்டி இருந்தது.

அப்பொழுது அது நடக்கவில்லை. அப்பொழுது கிடைத்திருந்தாலும் அவருக்கு ஒத்ததல தான் கிடைத்திருக்கும்.

இப்பொழுது, ‘பத்து தல’ கிடைத்து இருக்கிறது. அடுத்தது என்னுடைய காட்ஃபாதர் ரஹ்மான் சார்.

அவர் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நிச்சயம் நடந்து கொள்வேன்.

இதுவரை 50 படங்கள் நடித்து முடித்து இருக்கிறேன்.

ஆனால் எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கும் வராத என் அம்மா அப்பா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்கள் தான்.

அதற்கான ஏற்பாடுகளை அத்தனை சிரத்தை எடுத்து செய்து கொடுத்தவர்களுக்கு நன்றி.

முன்பெல்லாம் அதிரடியாக எனர்ஜியாக பேசுவேன்.

அது இப்பொழுது என்னுடைய பேச்சில் இல்லை அமைதியாக பேசுகிறேன் என்று பலரும் கேட்கிறார்கள்.

அது உண்மைதான்! அதற்கு காரணம் என்னவென்றால், அந்த நேரத்தில் எனக்கு தட்டிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை.

என்னுடைய ரசிகர்களை தவிர வேறு யாரும் அப்பொழுது இல்லை,

எனக்கு நானே துணை நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அதனால்தான் அப்படி கத்தி பேசினேன்.

அது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஊக்கம் தான்.

அதனால்தான் 39 கிலோ என்னால் குறைக்க முடிந்தது. பிறகு ‘மாநாடு’ படம் வெளியாகி வெற்றியடைந்து, ‘வெந்து தணிந்தது காடு’ வந்து, இப்பொழுது ‘பத்து தல’ படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் என்னை நிறுத்தி இருக்கும்பொழுது எப்படி நான் கத்த முடியும் பணிந்து தான் பேச முடியும்.

என்னுடைய ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக தான் படத்தை முடித்துவிட்டு மூன்று மாதம் சென்று மறுபடியும் உடல் எடை குறைத்து இப்பொழுது வந்து நிற்கிறேன்.

இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல் மட்டும் தான்.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே தான்.

ஒவ்வொரு நாளும் நம்மை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வளவு நாட்கள் ரசிகர்கள் எனக்காக கஷ்டப்பட்டது போதும்.

கூலாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு இனிமேல் என்னை ரசியுங்கள். நான் திரும்ப வந்துவிட்டேன்.

வேற மாதிரி வந்திருக்கிறேன். விடவே மாட்டேன்.

நம் தமிழ் சினிமாவை உலக அளவில் பெருமை பட வைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.

அது எனக்கும் நிச்சயம் உண்டு. உங்களுடைய தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் நீங்களாகவே இருங்கள்.

இதுதான் என் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது” என்று கூறிய சிம்பு மேடையில் ‘லூசுப்பெண்ணே’ பாடலைப் பாடி நடனம் ஆடினார்.

பின்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டோடு விழா நிறைவடைந்தது.