‘ஃபயர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள், காட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு !
‘ஃபயர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள், காட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு !
சென்னை 20 பிப்ரவரி 2025 கடந்த வாரம் வெளியான ‘ஃபயர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள வெற்றிப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே, ‘ஃபயர்’ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் சென்னையில் உள்ள காசி டாக்கீஸில் நேற்றிரவு (பிப்ரவரி 19) கொண்டாடினார்.
வார நாளின் இரவுக் காட்சியிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய ‘ஃபயர்’ திரைப்படம் நிறைவடைந்தவுடன் திரையரங்கு நிர்வாகிகளின் உற்சாக அனுமதியோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளுக்கு மத்தியில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழுவினர் கொண்டாடினார்கள்.
ஜெ எஸ் கே, பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், அனு, ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நாயகன் பாலாஜி முருகதாசுக்கு ‘ஃபயர்’ திரைப்படத்தை ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்து இயக்கியுள்ள ஜெ எஸ் கே தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.
திரைப்படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெ எஸ் கே கூறியதாவது…
“ஃபயர்’ திரைப்படத்திற்கு பேராதரவு வழங்கிய பொது மக்களுக்கும், ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
நல்ல கதைக்கும், கடின உழைப்புக்கும் மக்கள் எப்போதும் ஆதரவளிப்பார்கள் என்பதற்கு ‘ஃபயர்’ படத்தின் வெற்றி சாட்சி.
பார்வையாளர்கள் காட்சிக்கு காட்சி கைதட்டி ரசிக்கிறார்கள். யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வார நாட்களிலும் கூட்டம் குவிவதால் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாவது வாரத்திலும் காட்சிகள் மற்றும் திரைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.
உண்மையான வெற்றிக்கு இது அடையாளம். சின்ன படத்தை பெரிய படமாக்கிய மக்களுக்கே இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.”
‘ஃபயர்’ படத்தின் வெற்றி தனக்கும் தனது குழுவினருக்கும் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாகவும், தரமான படைப்புகளை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் ஜெ எஸ் கே தெரிவித்தார்.