அவரவர் இஷ்டத்திற்கு கட்டணம் நிர்ணயிப்பது எப்படி மக்களாட்சியாகும்? இயக்குநர் பேரரசு அரசுக்கு கோரிக்கை!
அவரவர் இஷ்டத்திற்கு கட்டணம் நிர்ணயிப்பது எப்படி மக்களாட்சியாகும்? இயக்குநர் பேரரசு அரசுக்கு கோரிக்கை!
சென்னை 16 செப்டம்பர் 2026 சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள், குறிப்பாக பண்டிகை காலங்களில், பேருந்து கட்டண உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் பேரரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கிறது.
பொதுமக்களின் அன்றாட போக்குவரத்திற்கான முக்கியமான சாதனமாக பேருந்துகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவும், அன்றாட பணிகளுக்காகவும் பெரிதும் நம்பியிருப்பது பேருந்து போக்குவரத்தையே.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து, ரூ.3,000, ரூ.4,000 என வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டால், சாதாரண மக்களால் அதை எவ்வாறு சமாளிக்க முடியும்?
பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது சென்னை மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள்.
ஒரு குடும்பம் சென்று வருவதற்கே பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டால், அவர்களது குடும்பப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
பேருந்து என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான முக்கியமான போக்குவரத்து சாதனம் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பண்டிகை காலங்களில் பயணிகளின் அவசரத் தேவையைப் பயன்படுத்தி கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயத்தில் தெளிவான, பொதுமக்களுக்கு சாதகமான நடைமுறை இருக்க வேண்டும்.
அவரவர் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தால் அது எப்படி மக்களாட்சியாகும்? பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு சீரான, நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடுதல் பொருளாதார சுமையை எதிர்கொள்ளாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பேருந்து ஏழைகளுக்கானது என்பதை அரசு கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குநர் பேரரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.











