இசைஞானி  இளையராஜா, நடிகர் சரத்குமார் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தனர் !

இசைஞானி  இளையராஜா, நடிகர் சரத்குமார் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தனர் !

சென்னை 16 செப்டம்பர் 2026 தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக தங்களது படைப்பாற்றலால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் இசைஞானி திரு. இளையராஜா மற்றும் நடிகரும் எழுத்தாளருமான திரு. சரத்குமார் ஆகியோரை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து, சங்கத்தில் உறுப்பினர்களாக இணையுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர்.

இந்தச் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் KBB நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புத் துறைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியும், இசையமைப்பாளராகவும் தனது தனித்துவமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ள இசைஞானி இளையராஜா அவர்களைச் சங்கத்தில் இணைத்துக் கொள்வது பெருமைக்குரியதாகும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதேபோல், நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ள திரு. சரத்குமார் அவர்கள் மூன்று திரைப்படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளதையும் குறிப்பிட்டு, அவரையும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ள சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

“சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருப்பது எங்களுக்குப் பெருமை” இருவரையும் சந்தித்த சங்க நிர்வாகிகள், “நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்கே பெருமை.

தமிழ் திரைப்படத்துறையில் உங்கள் நீண்டகாலப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நீங்கள் இணைவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்” என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர்.

சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் இளையராஜா மற்றும் சரத்குமார் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் பேனா அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெறும் உறுப்பினர் சேர்க்கைப் பணி தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் உள்ளிட்ட எழுத்துத் துறைகளில் தொடர்ந்து பங்களித்து வரும் தகுதியான படைப்பாளிகள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களை நேரில் சந்தித்து, அவர்களை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் படைப்புப் பங்களிப்பை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்துவதோடு, தமிழ் சினிமாவின் பல்வேறு காலகட்டங்களில் பங்களித்துள்ள முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரே அமைப்பின் கீழ் இணைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் படைப்புலகில் தொடர்ந்து பங்களித்து வரும் முக்கியமான ஆளுமைகள் சங்கத்தில் இணைவது, எழுத்தாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமையும்.

error: Content is protected !!