பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ஆம்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் !!
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ஆம்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் !!
சென்னை 08 செப்டம்பர் 2024 சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ பேர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள்.
ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணித்து தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக் கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
அந்த வெகு சிலரில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்களின் கதைத் தேர்வு, நாளுக்கு நாள் மெருகேறும் அவரது நடிப்பு ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் சினிமாவை அவர் எவ்வளவு கவனமாக அணுகுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஹரிஷ் கல்யாண்..
மீண்டும் அப்படி ஒரு அசத்தலான கதையம்சத்துடன் தற்போது உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரம், உருவ தோற்றம் என புது ஹரிஷ் கல்யாணை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரே இதற்கு சாட்சி.
தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார்.
இணை தயாரிப்பு அ. வெங்கடேஷ்
இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டி எஸ்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வரும் செப்-20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் படம் குறித்தும் அதில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் நாயகன் ஹரிஷ் கல்யாண்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்காக பேசிக்கொண்டிருந்த சமயத்தில் தான் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இந்த ‘லப்பர் பந்து’ கதையுடன் வந்தார்.
கதையைக் கேட்டதும் இந்த படத்தில் முதல் ஆளாக நுழைந்த நபர் நான் தான்.
காரணம் பெரும்பாலும் சிட்டி இளைஞனாகவே நடித்து வந்த எனக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம், விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் ஒரு பக்கம் இருந்தது.
அந்த இரண்டுமே இந்த ஒரே படத்தில் எனக்கு கிடைத்தது நானே எதிர்பாராத பரிசாக அமைந்து விட்டது.
அதே சமயம் கதையைக் கேட்டதும் அந்த ‘பூமாலை’ கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது தான் என் முதல் கேள்வியாக இருந்தது.
ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரமும் அந்த கதாபாத்திரமும் ஒன்று இல்லையென்றால் இன்னொன்று இல்லை என்பது போல சம பலத்துடன் அவ்வளவு வலுவாக உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த கதாபாத்திரத்திற்காக சில பெயர்களை யோசித்த சமயத்தில் தான் டக்கென இயக்குநர் அட்டகத்தி தினேஷின் பெயரை சொன்னார்.
எங்களுக்கும் அவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றினாலும் கொஞ்சம் வயதான இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா என்கிற ஒரு சந்தேகமும் இருந்தது.
ஆனால் கதையைக் கேட்டதும் நான் நடிக்கிறேன் என உடனே ஒப்புக் கொண்டார் தினேஷ்.
அவர் இந்த படத்திற்குள் வந்ததும் தான் படம் அடுத்த கட்டத்தை நோக்கி பரபரவென நகர்ந்தது.
கதை நடக்கும் அந்த கிராமம், அதில் உள்ள மக்கள், இப்படி தெருவுக்கு கிரிக்கெட் பைத்தியமாகத் திரியும் ஒரு பையன் என என்னுடைய கதாபாத்திர உருவாக்கமும் இயக்குநர் பச்சமுத்து இந்தக் கதையை சொன்ன விதமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
என் திறமையை மதித்து என்னை யார் விளையாடக் கூப்பிட்டாலும் அவர்களுக்காக சென்று விளையாடும் ஆக்ரோஷ இளைஞன் கதாபாத்திரம் எனக்கு.
அதேபோல எதிரியாக இருந்தாலும் திறமையை மதிக்கும் கதாபாத்திரம் தான் தினேஷுக்கும். கிரிக்கெட் இந்த படத்தில் முக்கிய இடம் பிடித்திருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் விதம் இதற்கு முந்தைய கிரிக்கெட் படங்களில் இருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டும்.
சிறு வயதில் இருந்தே நான் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உள்ளவன் என்றாலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் தான் என் ஏரியா. பவுலிங்கில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.
ஆனால் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால் அதற்காக சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன்.
பல சர்வதேச விளையாட்டு வீரர்களின் பவுலிங் முறையைக் கவனித்துப் பார்த்தாலும் அதில் உள்ள நுணுக்கங்களை மட்டுமே மனதில் பதிந்துகொண்டேனே தவிர யாருடைய சாயலையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்கான தோற்றத்தை உருவாக்கியதே ஒரு சுவாரசியமான விஷயம்.
இதுவரை நான் நடித்த படங்கள் எதிலும் இப்படி ஒரு லுக்கில் நடித்ததில்லை.
பலவிதமாக லுக்குகளை மாற்றி மாற்றி டெஸ்ட் எடுத்து கடைசியாக தற்போது நடித்திருக்கும் லுக்கை ஓகே செய்தோம். படத்தில் பெரும்பாலான காட்சிகள் கிராமத்து மைதானத்தில் எடுக்கப்பட்டதால் காலையிலிருந்து மாலை வரை அங்கேயே தான் இருப்போம்.
அதுவும் கொளுத்தும் கோடை வெயிலில் படப்பிடிப்பு நடத்தினோம்.
இயக்குநர் பச்சமுத்துவை பொருத்தவரை எனக்கு லுக் டெஸ்ட் எடுத்ததாகட்டும் படப்பிடிப்பில் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியதாகட்டும் இதுதான் வேண்டும் என எதிலும் ஒரு தீவிர முடிவை எடுக்கமாட்டார். கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்பிடித்து நம்மிடம் இருக்கும் பெஸ்ட் எது எனப் பார்த்து அதை தேர்வு செய்து கொள்வார்.
அந்த சுதந்திரம் இருந்ததால் எந்தவித பயமும் தயக்கமும் இன்றி இயல்பாக நடிக்க முடிந்தது.
இது விளையாட்டுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படம் தான்.
படத்தில் எதுவும் மெசேஜ் சொல்கிறீர்களா என்றால் அப்படி எதுவும் இல்லை.
அதற்கான கதையும் இது இல்லை. ஆனால் திரைக்கதையில் போகிற போக்கில் ஒன்றிரண்டு விஷயங்களை சொல்ல முயற்சித்திருக்கிறோம்.
அதுவும் வலிந்து திணித்ததாக இருக்காது.
கிரிக்கெட் பிரியர்களுக்கு மட்டுமல்ல, பொழுபோக்கு படங்களை விரும்பும் ரசிகர்களுக்கும் லப்பர் பந்து செமத்தியான விருந்தாக இருக்கும்” என்கிறார் ஹரிஷ் கல்யாண்.
தொழில்நுட்பக் குழுவினர் விவரம்.
தயாரிப்பு ; S லக்ஷ்மன் குமார்
இணை தயாரிப்பு ; A வெங்கடேஷ்
இயக்கம் ; தமிழரசன் பச்சமுத்து
இசை ; ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு ; தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பு ; G மதன்
கலை ; வீரமணி கணேசன்
பாடல்கள் ; மோகன் ராஜன்
தயாரிப்பு மேற்பார்வை: A P. பால்பாண்டி
ஆடை வடிவமைப்பு ; தினேஷ் மனோகரன்
மேக்கப் ; நெல்லை சண்முகம்
மக்கள் தொடர்பு ; A. ஜான்