இயக்குனர் ஷங்கர் வைகைப்புயல் வடிவேலு இடையே ‘இம்சை’கள் தீர்ந்தது விரைவில் வைகைப் புயல் திரையில் காணலாம்.

சென்னை 28 ஆகஸ்ட் 2021 இயக்குனர் ஷங்கர் வைகைப்புயல் வடிவேலு இடையே ‘இம்சை’கள் தீர்ந்தது விரைவில் வைகைப் புயல் திரையில் காணலாம்.

மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ திரைப்படம் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான படப்பிடிப்புக்கான அரங்குகள் அனைத்தும் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வைகைப்புயல் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.

இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் படக்குழுவினர் சார்பில் வைகைப்புயல் வடிவேலு மீது புகாரளிக்கப்பட்டது.

இதனால் வைகைப்புயல் வடிவேலுவுக்கு தொழில் ஒத்துழைப்பு இல்லை என முடிவெடுக்கப்பட்டது.

எனவே வைகைப்புயல் வடிவேலுவால் புது திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் விஷாலுடன் ‘கத்தி சண்ட’, தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

திரையுலகினர் பலரும் இயக்குநர் ஷங்கர் – வைகைப்புயல் வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த நடிகர் வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் திரு. வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எனவே விரைவில் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கலாம்.

லைகா நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வடிவேலு நடிக்கவுள்ளதாகவும், அதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.