இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’- லவ் மீ, லவ் மீ நாட்!
சென்னை 28 ஜூன் 2024 அஜித்குமார், பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை உருவாக்கி ‘ஸ்டார் டைரக்டர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவர் தனது பாலிவுட் பயணத்தைத் ‘ஷெர்ஷா’ படத்தில் இருந்து தொடங்கினார். அது பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் என்பதை மறுக்க முடியாது.
சல்மான் கானுடனான அவரது அடுத்த பெரிய படம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள ’நேசிப்பாயா’ என்ற அழகான அட்வென்ச்சர் காதல் கதையின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகிறார்.
விஷ்ணு வர்தன் நாடு முழுவதும் உள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், அறிமுக நடிகரான ஆகாஷ் முரளியுடன் அவர் புதிய படத்தில் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் பகிர்ந்திருப்பதாவது, “நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன்.
அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், “நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணு வர்தனுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. விஷ்ணு வர்தன் தனது ஹீரோக்களை எப்போதும் அழகாக திரையில் காண்பிப்பார்.
இந்தப் படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு அழகான அறிமுகமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
’நேசிப்பாயா’ படத்தை விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார் மற்றும் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.