தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர்.

இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவதால் அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.