நடிகர் சிம்பு மீதான குவியும் புகார்கள் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை

நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளார் படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு சிம்பு மறுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் சிம்புவை வைத்து படம் தயாரித்து வந்தார். அந்த படம் பாதியில் நிற்பதாக அவரும் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் தனது படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தும் பட வேலைகள் தொடங்கவில்லை என்று புகார் கூறியுள்ளார். கொரில்லா படத்தை தயாரித்த சுரேஷ் அவர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்பணம் கொடுத்ததாகவும் ஆனாலும் படப்பிடிப்பை இன்னும் தொடங்க முடியவில்லை என்று புகார் அளித்துள்ளார். இறுதியாக சிம்புவை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்த ‘மாநாடு’ படமும் நின்று போனது. இந்நிலையில், சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும், அதன்மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சிம்பு இழப்பீடு வழங்குவது குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது