பிகில் திரை விமர்சனம்

நடிப்பு : விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், கதிர் மற்றும் பலர்….

தயாரிப்பு : எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

இயக்கம் : அட்லீ

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

வெளியான தேதி : 25 அக்டோபர் 2019

ரேட்டிங் : 2.5/5

தமிழ் திரைப்பட உலகில் கடந்த சில ஆண்டுகளில் கபடி, ஃபுட்பால், கிரிக்கெட் பாக்சிங் பல விளையாட்டுக்களை மையமாக வைத்து திரைப்படங்கள் வருவது ஒரு டிரெண்ட் ஆக உள்ளது.

அந்த டிரெண்டில் ஒரு விளையாட்டு ஆடிப் பார்க்கலாம் என்று நடிகர் தளபதி விஜய்யும், இயக்குனர் அட்லீயும் ஆடிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஆட்டம் சரியாக அமைந்ததா என்பதுதான் கேள்வியே.

தமிழில் இதற்கு முன் வந்த படங்களைத் தழுவித்தான் அட்லீ அவருடைய ‘ராஜா ராணி, தெறி, மெர்சல்’ ஆகிய படங்களை எடுத்ததாக பவ குற்றச்சாட்டுகள் உண்டு. அதனால், இந்த ‘பிகில்’ திரைப்படத்தை ஒரு திரைப்படத்தை மையமாக வைத்து எடுத்தால்தானே குற்றம் என்று சொல்வார்கள் என பல படங்களை மையமாக வைத்து ‘பிகில்’- ஊதியிருக்கிறார். இயக்குனர் அட்லீ

மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று, விஷ்ணு விஷால் நடித்த ஜீவா, தர்ஷன் நடித்த கனா, ஹிப் ஹாப் தமிழன் ஆதி நடித்த நட்பே துணை, சசிகுமார் நடித்த கென்னடி கிளப்’ ஏன் அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் சில காட்சிகள் கூட ‘பிகில்’ படத்தை பார்க்கும் போது ஞாபகத்தில் வந்து போகின்றன.

இயக்குனர் அட்லீ இயக்குனரான பின் தமிழ்ப் படங்களை அதிகம் பார்ப்பதில்லை என்பது இதிலிருந்தே புரிகிறது. ஒரு கட்டத்தில் தியேட்டரில் பொறுமை இழந்து சிலர் வெறுப்பில் கூச்சலிடுவதும் விஜய் படத்தில் நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

டில்லிக்குச் செல்லும் வழியில் தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணியினர் சென்னை வருகிறார்கள். அவர்களின் கோச் ஆன கதிர்-ஐ கொல்ல முயற்சி நடக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக தாதாவான விஜய் கோச் ஆக நியமிக்கப்படுகிறார். ஒரு தாதா, ரவுடி தங்களுக்கு கோச்சா என பெண்கள் ஆவேசப்படுகிறார்கள். தாதா விஜய் யார், அவர் ஏன் ரவுடி ஆனார், இப்போது ஏன் கோச் ஆனார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பா ராயப்பன், மகன் மைக்கேல் என விஜய் இரண்டு வேடங்களில் வருகிறார். அப்பா ராயப்பன் கதாபாத்திரத்திற்கு முடிந்தவரையில் வயதான தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக கொஞ்சம் கரகர குரலில் தளர்வாகப் பேசுகிறார் விஜய். ஆனால், இறங்கி செய்ய வேண்டும் என்றால் ஒரே ஆளாக ஐம்பது பேரை வெட்டி சாய்க்கிறார். இந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது கமல்ஹாசனின் ‘நாயகன்’ வேலு நாயக்கர் வந்து, தோற்றத்தில் மட்டும் ‘லேசாக’ ஞாபகத்திற்கு வந்து போகிறார்.

மகன் மைக்கேல் தான் பிகில். அவர் பிளாஷ்பேக்கில் கால்பந்து வீரராக இருக்கும் போது பிகில். தாதாவாக இருக்கும் போது மைக்கேல். ‘பிகில்’ ஆக அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக, நம்பர் 1 கால்பந்து வீரராக அமைதியாக இருக்கிறார். அப்பாவை அவர் கண்முன் கொன்ற அடுத்த வினாடியே தாதா மைக்கேல் ஆக மாறிவிடுகிறார். கோச் ஆன பின் தாதா மைக்கேலை கொஞ்சம் மறந்துவிட்டு கோட் மாட்டிய கோச் ஆக மாறிவிடுகிறார். ஆனாலும் விட்ட குறை தொட்ட குறையாக திடீர் திடீரென தன் தாதா வேலையைக் காட்டுகிறார்.

சிரஞ்சீவி நடிப்பில் வெளி வந்த’சைரா’ திரைப்படத்தில் வந்து போனது போலவே இந்தப் படத்திலும் நடிகை நயன்தாரா வந்து போகிறார். சில காட்சிகளில் வந்து கதாநாயகன் விஜய்யைக் காதலிக்கிறார். அப்புறம் ஒரு பாடல் பாடுகிறார், பின்னர் பிசியோதெரப்பிஸ்ட்டாக கூடவே இருக்கிறார். கதாநாயகன் விஜய், கதாநாயகி நயன்தாரா டூயட் வரும் போது தியேட்டரில் பாதி பேர் எழுந்து வெளியே போய் விடுகிறார்கள்.

யோகிபாபு மட்டும் ஒரு ஐந்தாறு முறை சிரிக்க வைக்கிறார். ஆனந்தராஜ், விஜய் கூடவே இருக்கிறார். எந்த காட்சியிலாவது வசனம் பேசினாரா என்பதுதான் தெரியவில்லை.

அப்பா ராயப்பன் விஜய்க்கு வில்லன் ஐ.எம்.விஜயன். எந்த வசனமும் போசாமல் இரண்டு முறை விஜய்யை முறைத்துவிட்டு, மகன் விஜய்யால் கொல்லப்பட்டு அவர் வில்லத்தனத்தை முடித்துக் கொள்கிறார். மகன் விஜய்க்கு வில்லன் ஜாக்கி ஷெராப். அவரை ஜட்டியுடன் மட்டுமே இருக்க வைத்து கொடுமைப்படுத்துவதெல்லாம் ரொம்ப ஓவர். இவரும் கடமைக்கு நான்கைந்து வில்லத்தனமான வசனங்களைப் பேசி தன் பங்கை முடித்துக் கொள்கிறார். இவரது கதாபாத்திரப் பெயர் சர்மா. யோசிப்பவர்களுக்குக் காரணம் புரியும். டேனியில் பாலாஜியும் படத்தில் மூன்றாவது வில்லன். அவருக்கு ஒரு மூன்று காட்சிகள்.

பெண்கள் கால்பந்து அணியில் இந்திரஜா, ரெபா மோனிக்கா ஜான், அம்ரிதா என ஓரளவிற்குத் தெரிந்த முகங்கள். கிராபிக்ஸ் புண்ணியத்தில் அவர்களை சிறந்த கால்பந்து வீராங்கனைகளாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கோச்சாக கதிர். விஜய்யின் தம்பி போல வந்து கொஞ்சம் சென்டிமென்ட்டைக் கூட்டுகிறார்.

ஒரு காட்சியில் அழுவதெற்கென்றே ரோகிணி, தம்பி என ஒரு காட்சியில் வசனம் பேசிய தேவதர்ஷினி என, ஒரு காட்சி, ஒரு வசனம் என சிலர் வந்து போகிறார்கள். இடைவேளைக்குப் பின் டீம் மேனேஜராக விவேக். சில மொக்கை ஜோக்குகளை சொல்லி அவரே சிரித்துக் கொள்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வெறித்தனம், சிங்கப் பெண்ணே’ பாடல்கள் மட்டும் ரசிக்கும் ரகம். பின்னணி இசையில் பில்ட்-அப் சமாச்சாராங்கள் எதுவும் இல்லை. ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு கால்பந்தாட்டக் காட்சிகளை விதவிதமாக எடுத்துத் தள்ளியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

இடைவேளை என்னமோ ஏதோ என்றே காட்சிகள் நகர்கின்றன. இரண்டு வேட விஜய்யை மூன்று கதாபாத்திரங்களாகக் காட்டுவதற்கு சில பில்ட்-அப் காட்சிகள். அப்பா விஜய்க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவருக்கும் சில காட்சிகள் என இலக்கில்லாமல் திரைக்கதை நகர்கிறது.

இடைவேளைக்குப் பின் ‘கனா, கென்னடி கிளப்’ படத்தின் மற்றொரு வெர்ஷனாக மட்டுமே படம் தெரிகிறது. விஜய்யின் ரசிகர்களைத் திருப்பதிப்படுத்த சில ஹீரோயிசக் காட்சிகள், சில பன்ச் வசனங்கள். மற்றபடி அட்லீ, விஜய் கூட்டணியில் வெளிவந்த ‘தெறி, மெர்சல்’ அளவிற்கு இந்தப் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம்தான்.

எந்த தடைகள் வந்தாலும் அதை தகர்த்து லட்சியத்தை அடைய பெண்கள் தன்னம்பிக்கை உடன் போராட வேண்டும். இது தான் படத்தின் மைய கரு. ஆனால், அது விஜய் என்ற ஹீரோயிச பார்முலாவிற்குள் அடங்கி போய் விடுகிறது. அப்பாவின் கனவையும், ஏழை பெண்களின் கனவையும் தான் சார்ந்த மக்களின் கனவையும் காப்பாற்ற துடிக்கும் ஹீரோ விஜய்யை இன்னும் அழுத்தமாக நம் மனதிற்குள் பதிய வைத்திருக்கலாம்.

‘பிகில்’ – கேக்கலை… கேக்கலை… சத்தமா…!