வடிவேலுக்கு எதிரான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க போட்ட தடை நீங்குமா?

நடிகர் வடிவேலு கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

வருடத்துக்கு 8, 10 படங்களில் நடித்து பிசியாக இருந்த வடிவேலு கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்காமல் சும்மா இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சிவலிங்கா, மெர்சல் ஆகிய 2 படங்கள் 2017-ல் திரைக்கு வந்தன. அதன்பிறகு ‘இம்சை அரசன்-2’ பட சர்ச்சையால் அவரால் நடிக்க முடியவில்லை.

இந்த படம் ஷங்கர் தயாரிக்க சிம்புதேவன் இயக்கத்தில் உருவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். வடிவேலு சில நாட்கள் நடித்தார். அதன்பிறகு இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார்.

வடிவேல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் அளித்த புகாரின் பேரில், அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தடை விதித்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல தடவை பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. தடையை மீறி நடிக்க வடிவேல் தயாராக இருக்கிறார். அவரிடம் இயக்குனர்கள் பலர் கதைகளும் சொல்லி வருகிறார்கள்.

ஆனாலும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பணியை தனி அதிகாரி ஏற்றுள்ளார். இதனால் தடைவிலகுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் எனது தரப்பு நியாயத்தை சொன்னபிறகும் யாரோ தொடர்ந்து பிரச்சினை செய்கிறார்கள். நடிகர் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது” என்றார்.