இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என நடிகர் சிம்பு அறிக்கை

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் ‛இந்தியன் 2′ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

9 பேர் காயமடைந்தனர். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகர் தனுஷ், ஜிவி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் சிம்பு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன்.

அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் சிம்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!