காவல்துறையினர் தன்னை அதிகமாக துன்புறுத்துகிறார்கள் – நடிகர் கமல்ஹாசன் புகார்!

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடித்துக்காட்டச் சொல்லி போலீசார் தன்னை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்2 லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

இந்த திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தது.

அப்போது கிரேன் அறுந்து விழுந்து, ஒரு உதவி இயக்குநர் உட்பட மூவர் பலியானார்கள்.

9 பேருக்கு பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர், கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், மேலாளர் சுந்தர்ராஜன் கிரேன் உரிமையாளர், தயாரிப்பு நிர்வாகி உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.  பின் வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படபிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி,  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது மூன்று மணிநேரம் கமல்ஹாசனை ஒரே இடத்தில் அமரவைத்து அவருக்கு மாத்திரை, மருந்து பழரசம் தண்ணீர் அருந்தக்கூட அனுமதிக்காமல் விசாரணை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. கமல்ஹாசன் மீது சிறு துரும்பும் பட விடமாட்டோம் என மக்கள் நீதி மய்யம் கண்டித்திருந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உட்பட படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்களை நாளை விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். . இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில்,  “அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளேன். மார்ச் 3-ல் 3 மணிநேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்குச் சென்று விளக்க இயலாது.

இது கொலை வழக்கு அல்ல. விபத்து வழக்குத்தான். சம்பவ இடத்தில் நடித்துக் காட்டச் சொல்கின்றனர்”
என குறிப்பிடப்பட்டுள்ளது. .

காவல் துறை தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “விபத்து நடந்தபோது நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்தார். அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கமல்ஹாசன் மட்டுமல்லாமல் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 23 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதாநாயகன் என்ற முறையில் புலன் விசாரணையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது.

சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வருவதால் சட்டம் ஒழுங்கில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, விபத்து நடந்த இடத்தில் நேரில் கமல்ஹாசன் ஆஜராகத் தேவையில்லை. விசாரணைக்குத் தேவைப்பட்டால் அவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என  உத்தரவு பிறப்பித்தார்.

error: Content is protected !!