கதை ஆசிரியர்களின் நலனுக்காக ஆலோசனை வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினருடன் சந்திப்பு !

கதை ஆசிரியர்களின் நலனுக்காக ஆலோசனை வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினருடன் சந்திப்பு !

சங்கத்தில் உறுப்பினராக இணைய கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையும், சூப்பர் ஸ்டாருமான திரு. ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர்.

இந்த சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் R. சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழ் திரையுலகில் கதை ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு நிலைகள் மற்றும் அவர்களின் எதிர்கால நலன் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கதை ஆசிரியர்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை கதை, திரைக்கதை மற்றும் எழுத்துப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து ரஜினிகாந்த் அவர்களுடன் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடினர்.

குறிப்பாக, இன்றைய சூழலில் கதை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.அப்போது, கதை ஆசிரியர்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேசி, எந்தவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல், சுமூகமான முறையில் தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும் என்று ரஜினிகாந்த் அவர்கள் தனது அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கதை மற்றும் எழுத்துப் பணியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர் என்பதால், கதை ஆசிரியர்களின் நலன் குறித்த அவரது கருத்துகளும் ஆலோசனைகளும் சங்க நிர்வாகிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், கதை மற்றும் எழுத்துப் பணிகளிலும் தனது பங்களிப்பை வழங்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘வள்ளி’, ‘பாபா’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதையாசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் உறுப்பினராக இணைய வேண்டும் என்ற கோரிக்கையை சங்க நிர்வாகிகள் முன்வைத்தனர்.

சங்க நிர்வாகிகளின் இந்த அன்பான கோரிக்கையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டு, சங்கத்தில் உறுப்பினராக இணைய சம்மதம் தெரிவித்தார்.இது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சந்திப்பு தமிழ் சினிமாவில் பல தலைமுறை ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கதை ஆசிரியர்களின் நலன் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்து, சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பது  எழுத்தாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கதை என்பது ஒரு திரைப்படத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும்.

அந்தக் கதையை உருவாக்கும் கதை ஆசிரியர்களின் உழைப்பும், படைப்பாற்றலும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் போன்ற மூத்த திரையுலக ஆளுமையின் ஆலோசனையும் ஆதரவும் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு கூடுதல் வலிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திப்பின் போது திரையுலகில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, அவர்களது நலன் மற்றும் எதிர்காலத்தில் எழுத்தாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தெரிவித்து விடைபெற்ற சங்க நிர்வாகிகள் தங்களுக்கு நேரம் ஒதுக்கி, அன்புடன் வரவேற்று, நீண்ட நேரம் தங்களுடன் உரையாடியதுடன், கதை ஆசிரியர்களின் நலன் தொடர்பாக மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நன்றியைத் தெரிவித்தனர்.

மேலும், சங்கத்தில் உறுப்பினராக இணைய தங்களது கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டதற்கும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் வாழ்த்தும் ஆசியும் பெற்று சங்க நிர்வாகிகள் விடைபெற்றனர்.

கதை ஆசிரியர்களின் நலன் தொடர்பான இந்த சந்திப்பு, தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.

error: Content is protected !!